×

பிபர்ஜாய் புயல் எதிரொலி வெள்ளத்தில் மிதக்கிறது ராஜஸ்தான்: 3 மாவட்டங்கள் கடும் பாதிப்பு

ஜெய்ப்பூர்: பிபர்ஜாய் புயலின் எதிரொலியாக ராஜஸ்தானின் 3 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத்தின் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. குஜராத்தில் கரையைக் கடந்த புயல், ராஜஸ்தானை நோக்கி நகர்ந்தது. புயல் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலத்தில் கன மழை பெய்கிறது. இந்த மழையால் ஜலோர்,சிரோகி, பார்மர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநில பேரிடர் மற்றும் நிவாரண துறை செயலாளர் பி.சி.கிஷன் கூறுகையில், ‘‘பாலி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கிய 6 பேரை மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.பலத்த மழையினால் ஜலோர்,சிரோகி, பார்மர் மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. பெரிய அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. சிரோகியில் உள்ள பட்டிசா அணையின் நீர்மட்டம் 315 மீட்டராக உயர்ந்துள்ளது. இன்னும் 15 முதல் 20 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும். மழை வெள்ளத்தினால் உயிர் சேதம் எதுவும் இல்லை’’ என்றார். இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின்படி, புயல் எதிரொலியாக வீசிய பலத்த காற்று தெற்கு ராஜஸ்தானில் இருந்து கிழக்கு வட கிழக்கு பகுதியை நோக்கி நகரக்கூடும். மணிக்கு 10 வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.

* அசாமில் வெள்ளம்

கடந்த சில நாட்களாக அசாமில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் பிரம்மபுத்ரா உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுகின்றன. 10 மாவட்டங்களில் 37,535 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பிபர்ஜாய் புயல் எதிரொலி வெள்ளத்தில் மிதக்கிறது ராஜஸ்தான்: 3 மாவட்டங்கள் கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,Cyclone Pibarjai ,Arabian Sea ,Gujarat ,Cyclone Bibarjai ,Dinakaran ,
× RELATED உள்ளாடைகளை கழற்றி சிறுமியை...