×

காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல்: அரியானாவில் அமித்ஷா குற்றச்சாட்டு

சிர்சா: ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார். ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டு நிறைவையொட்டி, அரியானா மாநிலம் சிர்சாவில் நேற்று நடந்த பேரணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி வலிமையானது, தீர்க்கமானது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை நீக்கியது உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முந்தைய ஐமு கூட்டணி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது வீரர்களின் தலையை துண்டித்த போது பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் மவுனம் காத்தனர். ஆனால் மோடி ஆட்சியில், உரி மற்றும் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலக்கு இந்தியா தக்க பதிலடி தந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டை பாதுகாப்பானதாக மோடி மாற்றி உள்ளார். ஒன்பது ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்தது. இந்த 9 ஆண்டு கால வெளிப்படைத் தன்மையான மோடி ஆட்சியில், எதிராளிகளால் கூட ஊழலை சுட்டிக் காட்ட முடியாது.இவ்வாறு அமித்ஷா பேசினார்.

* முதல்வரா? பைலட்டா?

முன்னதாக அமித்ஷா, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசுகையில், ‘‘பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங்கிற்கு ஒரே ஒரு வேலைதான். ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் எங்கு சென்றாலும் அவர் கூடவே செல்ல வேண்டும். இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கின்றனர். மான் என்ன முதல்வரா அல்லது கெஜ்ரிவாலின் பைலட்டா? இதன் காரணமாக, பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது’’ என்றார்.

The post காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல்: அரியானாவில் அமித்ஷா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,IMU ,Amit Shah ,Haryana Sirsa ,United Progressive Alliance ,Union ,
× RELATED தேர்தல் முடிவுகளுக்கு பின் காங்கிரஸ்...