×

பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 2 லட்சம் வேலைகளை ஒழித்துக்கட்டிய மோடி அரசு: ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகளை ஒழித்துக்கட்டி இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவை மோடி அரசு தகர்த்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல் கூறியிருப்பதாவது: பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாகவும், ஒவ்வொரு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கான கனவாகவும் இருந்தன, ஆனால் இன்று அந்த நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை தருவதில்லை. நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த 2014ல் 16.9 லட்சம் பேர் வேலை செய்து வந்தனர். 2022ல் அது 14.6 லட்சமாக குறைந்துள்ளது. நாடு முன்னேறி வருவதாக மோடி அரசு கூறிவரும் நிலையில் வேலை வாய்ப்புகள் குறைகிறதா?

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைகள் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்தவர்கள், வேலைகளை அதிகரிப்பதற்குப் பதிலாக, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வேலைகளை ஒழித்துள்ளனர். இந்த நிறுவனங்களில் ஒப்பந்த ஆட்சேர்ப்புகளை ஏறக்குறைய இரட்டிப்பாகி உள்ளது. ஒப்பந்த ஊழியர்களை அதிகரிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டப்படி வழங்க வேண்டிய இடஒதுக்கீடு உரிமையைப் பறிக்கும் வழியல்லவா? இது இந்த நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் சதியா? தொழில்துறையினரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அரசு வேலைகள் நீக்கப்பட்டன! இது என்ன வகையான அமிர்த காலம். இது உண்மையிலேயே ‘அமிர்த காலம்’ என்றால் ஏன் இப்படி வேலைகள் காணாமல் போகிறது. மோடி ஆட்சியின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கிறது. வேலை கிடைக்கும் என்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக நசுக்கப்படுகின்றன. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

The post பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 2 லட்சம் வேலைகளை ஒழித்துக்கட்டிய மோடி அரசு: ராகுல் காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Modi government ,PSUs ,Raqul Gandhi ,New Delhi ,Modi Govt ,PSU ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...