×

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அறிவிப்பு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி, பா.ஜ அதிர்ச்சி

ஆத்தூர்: ‘கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும், அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி மாறுபடும், அமித்ஷா சொல்வதெல்லாம் அவரது சொந்த கருத்து’ என்று சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜ, மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை கையில் எடுத்து அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை என்று கூறி வருகிறது. ஆனால், ‘பாஜவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாம் தோல்வியடைந்தோம். அவர்கள் கூட்டணியே வேண்டாம். எப்போதும் கூட்டணிக்கு நாம்தான் தலைமை வகிக்க வேண்டும்’ என்று அதிமுக 2ம் கட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில், கொங்கு மண்டலத்தில் ‘யார் பெரிய ஆள்’ என்ற மோதல் எடப்பாடி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இடையே நீடித்து வருகிறது. இதனால், ‘அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம். தனித்து நிற்கலாம்’ என்ற கோஷத்தை அண்ணாமலை தலைமைக்கு வலியுறுத்தி வருகிறார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை மிரட்டி வருகிறார். இதற்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால், தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது என்று எண்ணும் டெல்லி பாஜ தலைமை, நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக என்ற ஏணி வேண்டும் என்று விடாமல் பிடித்து வருகிறது.

தற்போது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் பாஜவுக்கு எதிராக ஒருங்கிணைந்து வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜ, நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்யும் வேலையில் இறங்கி உள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாநிலமாக கூட்டணியை உறுதி செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணம் செய்து வருகிறார். தமிழகத்துக்கு 2ம் நாள் சுற்றுப்பயணமாக கடந்த 10 மற்றும் 11ம் தேதி வந்தார். அப்போது எடப்பாடியை சந்தித்து கூட்டணியை இறுதி செய்ய அமித்ஷா திட்டமிட்டு இருந்தார். ஆனால், அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை மிரட்டல் மற்றும் 20 தொகுதிகளை கேட்டு நெருக்கடி போன்ற காரணங்களால் அமித்ஷாவுடனான சந்திப்பை எடப்பாடி ரத்து செய்தார்.

அமித்ஷா சென்ற பின் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, ‘ஜெயலலிதா மிக மோசமான ஊழல் முதல்வர்’ என்று கூறியிருந்தார். இதற்கு அதிமுக தலைவர்கள், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் போட்டனர். மேலும், அண்ணாமலையை கட்சியை விட்டு நீக்க வேண்டும். இல்லையென்றால் கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாஜ, அண்ணாமலை மீதான தீர்மானத்தை வாபஸ் பெற வலியுறுத்தினர்.

இந்த சூழலில், அதிமுக-பாஜ இடையேயான மோதலை சமாதானம் செய்ய தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி வரும் 23ம் தேதி சென்னை வருகிறார். அப்போது எடப்பாடியை சந்தித்து சமாதானம் பேச உள்ளார். அவரிடம், அண்ணாமலையை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க எடப்பாடி வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் விழா, மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: அதிமுக, பாஜகவின் அடிமைபோல் செயல்படுவதாக கூறப்படுகிறதே?

பதில்: எம்ஜிஆர், ஜெயலலிதா என்கிற மாபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்டுக்கோப்பான இயக்கமான அதிமுக, எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் அடிமையாக இருக்காது. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகள் உள்ளன. அதிமுக தனது கொள்கையின்படி சிறப்பாக செயலாற்றி வருகிறது.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று அமித்ஷா கூறியுள்ளாரே?

பதில்: அமித்ஷா சொல்வது அவரது சொந்த கருத்து. நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் தேர்தல் வரும் போது தான் பேச முடியும். கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது தான். நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

கேள்வி: நீட் தேர்வில் தற்போது அதிமுகவின் நிலை என்ன?

பதில்: நீட்தேர்வை என்றைக்கும் எதிர்க்கும் இயக்கமாக அதிமுக உள்ளது. அதிமுக ஆட்சியின் போது கொண்டு வந்த, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிப்பால் தான், இன்றைக்கு பெருமளவில் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவர்களாகி வருகிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் என்றுமே உழைக்கின்ற இயக்கமாக அதிமுக திகழ்ந்து வருகிறது.

கேள்வி: ஊழல் வழக்குகளை அதிமுக எப்படி பார்க்கிறது?

பதில்: அரசியல் நாகரீகம் கருதி, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியின் போது, செந்தில்பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நீதிமன்றம் சென்றதால், அவர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். அப்படியானால் அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் எடப்பாடி எழுந்து சென்றுவிட்டார். அதிமுகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாக பாஜ மேலிட தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பாஜவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அறிவிப்பு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி, பா.ஜ அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Edabadi Palanisamy ,Pa ,Aathur ,Amitsha ,Edapadi Palanisamy ,
× RELATED ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர்...