×

சிவகாசி அருகே ஆனைக்குட்டம் கிராமத்தில் சிதிலமடைந்த கிணறுகளை தூர்வார வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

சிவகாசி: சிவகாசி அருகே ஆனைக்குட்டம் கிராமத்தில் சிதிலமடைந்து கிடக்கும் கிணறுகளை போர்க்கால அடிப்படையில் தூர் வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே ஆனைக்குட்டம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடி யி்ருப்பு வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் சுமார் 80 ஆண்டுகள் பழமையான குடிநீர் கிணறுகள் ஏராளமாக உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த கிணறுகள் மூலம்தான் குடிநீர் விநியோகம் நடைபெற்றது. இக்கிணறுகள் காலப்போக்கில் பயன்பாட்டிற்கு இல்லாமல் பாழடைந்து, பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது.

கிணறுகளில் குப்பைகள் நிறையும் பட்சத்தில் தீ வைத்து எரிக்கின்றனர். கடந்த சில ஆண்டாய் இக்கிணறுகள் தூர் வாராமல், குப்பைகள் சூழ்ந்த மண் மேவிக்கிடக்கின்றது. இதனால், கிணற்று நீரை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள இந்த கிணறுகள் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பின்றி காணப்படுவதால் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதி கிணறுகளை தூர் வாரினால், கோடை காலத்தில் மக்களின் தண்ணீர் தேவைக்கு பயன்படுத்த முடியும். கிணறுகளை தூர்வாரி தூய்மைப்படுத்திய பிறகு, கிணற்றின் சுவர்களுக்கு வண்ணம் அடித்து, கிணற்றின் மேல்பாகத்தில் பாது காப்பான முறையில் இரும்பு ஜன்னல்கள் அமைக்கும் பணிகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post சிவகாசி அருகே ஆனைக்குட்டம் கிராமத்தில் சிதிலமடைந்த கிணறுகளை தூர்வார வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anaikuttam village ,Sivakasi ,Anaikuttam ,Dinakaran ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி