×

இல்லாத பொருளே இல்லாத பொன்மலை வாரச்சந்தையில் அடிப்படை வசதியில்லை: வேதனையில் பொது மக்கள், வியாபாரிகள்

திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே சந்தையில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் சந்தை முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் கட்டண விவரம் குறித்த பேனர் வியாபாரிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பொன்மலை ரயில்வே சந்தை நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது. பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களின் வசதிக்காக கடந்த 1927ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டதாகும். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் நடக்கும் இந்த சந்தையில் அந்த காலத்தில் ரயில்வே பணியாளர்கள் தங்களின் வார தேவைக்கான மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவது வழக்கம்.

பொன்மலை ரயில்வே வார சந்தையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், ஆடு, கோழி, மீன், நண்டு, இறால், நாட்டுக்கோழி, முட்டை, கருவாடு உள்ளிட்ட அசைவ வகைகளும், இரும்பு, அலுமினியம், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் சாமான்கள், மண் பாத்திரங்கள், எலக்ட்ரிக் சாமான்கள், மலர், காய்கறி கன்றுகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் திருச்சியின் அருகிலுள்ள கிராமத்து பெண்களின் சொந்த தயாரிப்புகளான வத்தல், அப்பளம், வடகம் உள்ளிட்ட பொருட்களும் தரமாக கிடைக்கும். திருச்சி சுற்றுப்புற சிறு, குறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை விற்பதற்கு ஏற்ற சந்தையாகவும் உள்ளது.

இந்த வார சந்தை அடித்தட்டு வியாபாரிகள் மற்றும் பகுதிநேர வேலையாக செய்யும் மாணவர்கள் என பலருக்கும் சிறந்த வாழ்வாதாரத்தை அளித்து வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறும் இந்த சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு வியாபாரிகள் கடை விரித்து தொழில் செய்கின்றனர். ஞாயிறு மட்டும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால் இங்கு பெயருக்குகூட ஒரு கழிப்பறையோ, குடிதண்ணீர் வசதியோ இல்லை.

ஆனால், வியாபாரிகளிடம் இருந்து தரை வாடகை வசூலிப்பதற்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை ஏலம் விட்டு ரயில்வே ஒரு தொகையை கல்லா கட்டுகிறது. பொதுமக்களின் பயன்பாட்டில் இருக்கும் ஒரு சந்தையில் சின்னஞ்சிறு அடிப்படை வசதியைக்கூட செய்து கொடுக்காமல் ரயில்வே நிர்வாகம் நூற்றாண்டை கடந்து வந்திருக்கிறது. ரயில்வே சார்பில் ஒரு கடைக்கு எவ்வளவு வசூலிக்க வேண்டும் என வாடகையை நிர்ணயித்துள்ள ரயில்வே நிர்வாகம் 3 ஆண்டுக்கு ஒரு முறை வாடகையில் 10 சதவீதம் உயர்த்துவதற்கும் குத்தகைதாரர்களுக்கு உரிமை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சந்தையின் முகப்பில் வாடகை விவரங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள பேனர் சிறு வியாபாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், தலை சுமைக்கு ₹.17, சுமையுடன் கூடிய டூவீலர்-22, சுமையுடன் கூடிய தட்டு வண்டி-33, மாட்டு வண்டி-44, கார்-110 பிரச்சார வாகனம்-121, தரைக்கடை-121, டாடா ஏஸ்-83, கனரக வாகனம்-165, மினி லாரி-110, கார் பார்க்கிங்-11, கம்பிகேட் மார்க்கெட் தினசரி தரைக்கடை வாடகை-66 என வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குத்தகைதாரர் தரப்பில் தெரிவித்ததாவது:ரயில்வே நிர்வாகம் கூறியதன் பேரில் தான் பேனர் வைத்துள்ளோம். சந்தையில் அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் தான் செய்து கொடுக்க வேண்டும். மற்றபடி பேனரில் உள்ளது போன்று வாடகையை நாங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி வசூல் செய்வதில்லை. தலைச்சுமை வியாபாரிகளிடம் வாடகையே வசூல் செய்வதில்லை. வாரந்தோறும் ₹.5,500 செலவு செய்து சந்தையில் சேரும் குப்பைகளை அள்ளி ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வருகிறோம் என்றனர்.

பொன்மலை வாரச்சந்தை மொத்தத்தில் மொட்டைத் தரையில்தான் நடக்கிறது. இதை குத்தகைக்கு விட்டு லாபம் ஈட்டும் ரயில்வே நிர்வாகம் சிறிதளவேனும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதியை செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

The post இல்லாத பொருளே இல்லாத பொன்மலை வாரச்சந்தையில் அடிப்படை வசதியில்லை: வேதனையில் பொது மக்கள், வியாபாரிகள் appeared first on Dinakaran.

Tags : Ponmalai ,Trichy ,Dinakaran ,
× RELATED பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம்...