×

வேளாண் திட்டங்களை பெற விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்தல் அவசியம்

சிவகங்கை, ஜூன் 18: வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை பெற விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்வது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022ம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2023-2024ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 89கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை துறையில் பல்வேறு நல உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மை துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப்பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலி ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர். மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் திட்டப்பலன்களை பெற்றிட கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் முன்பதிவு செய்வதால் துறையில் வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் திட்டப்பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம். கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேளாண் திட்டங்களை பெற விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்தல் அவசியம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Department of Agriculture ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...