×

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் நீர்வரத்து அதிகரிக்க கலெக்டர் ஆலோசனை

மதுராந்தகம், ஜூன் 18: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் நீர்வரத்து அதிகரிப்பது குறித்து செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆலோசனை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் ஊராட்சியில் உள்ள பறவைகள் சரணாலயத்தை நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ர.ராகுல்நாத் நேற்று பார்வையிட்டார். அப்போது, ஏரியில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்ததன் காரணமாக பறவைகள் வரத்து குறைந்துள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட வளையபுத்தூர் ஏரியிலிருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த கால்வாயின் வழியாகத்தான் வேடந்தாங்கல் ஏரிக்கு மழைக்காலங்களில் தண்ணீர்வந்து சேரும்.

எனவே எதிர்வரும் மழை காலத்துக்கு முன்பாக 2 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த கால்வாயை ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் ஆகிய பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த கால்வாயில் சுமார் 400 மீட்டர் அளவில் உள்ள பாறைகள் பெருங்கற்கள் போன்றவற்றை போதிய அளவிற்கு அகற்றி கால்வாய் முழுவதையும் துரிதமாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இந்த சரணாலயத்திற்கு வந்து செல்லும் பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும்.

குறிப்பாக குடிநீர் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும், வேடந்தாங்கல் சரணாலயம் குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் மாமல்லபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சுற்றுலா தலங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும், அனைத்து பணிகளையும் மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட சார் கலெக்டர் லட்சுமிபதி, வனச்சரக அலுவலர் ரூபா லெஸ்ஸி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்து பாலா, வனச்சரக அலுவலர் பிரசாந்த், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ், வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் நீர்வரத்து அதிகரிக்க கலெக்டர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Vedantangal Bird Sanctuary ,Madhurandagam ,Chengalpattu ,Collector ,Rahulnath ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிக்கு...