×

தினமும் 20 ஆயிரம் வாகனங்கள் செல்லும் நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற தாப்பாத்தி விலக்கு 4 வழிச்சாலை

கோவில்பட்டி, ஜூன் 18: தாப்பாத்தி விலக்கு 4வழிச்சாலையில் தினமும் 20ஆயித்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் நிலையில் சாலை முழுவதும் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை சுமார் 149 கி.மீ உடையதாகும். கடந்த 2007ம் ஆண்டு இச்சாலை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது இச்சாலையின் வழியே சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினந்தோறும் இவ்வழியாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு ஒரேயொரு முறை மட்டுமே பராமரிப்பு செய்யப்பட்டது. அவ்வப்போது ஏற்படும் குண்டும் குழிகளை பெயரளவில் பராமரிப்பு செய்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் இச்சாலையை கடந்து செல்லும் போது மிகவும் சிரமப்படுகின்றனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன் புதிய தார்ச்சாலை அமைக்க பல இடங்களில் பழைய தார்க்கலவையை பெயர்த்தெடுத்தனர். தற்போது வரை புதிய சாலை அமைக்கப்படவில்லை. இவை தவிர கடந்த நான்கு மாதங்களாக தாப்பாத்தி விலக்கு அருகே சாலை முழுவதுமாக பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. மேலும் சாலையின் நடுப்பகுதியில் தடுப்பு பலகை வைத்துள்ளனர். அதிவேகமாக வரும் வாகனங்கள் இவ்விடத்தில் விபத்துக்குள்ளாகிறது. இச்சாலையை பயன்படுத்துவோரிடம் பராமரிப்பு பணிக்காக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் போதிய பராமரிப்பு செய்யப்படுவதில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுக்கள் நலன் கருதி புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post தினமும் 20 ஆயிரம் வாகனங்கள் செல்லும் நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற தாப்பாத்தி விலக்கு 4 வழிச்சாலை appeared first on Dinakaran.

Tags : Thapatti ,Kovilpatti ,Dappathi Expressway 4-laning ,Dappathi Expressway 4-lane ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி...