
‘‘தேனிக்காரரின் அரசியல் கோட்டை தளர்ந்து வருவதாக சொல்றாங்களே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில இலை, தாமரை கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஒருவரை, ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்த மோதலால் தேனிக்காரரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தாங்க. நாடாளுமன்ற தேர்தலில் தாமரை கட்சியுடன், ஐக்கியமாகலாம் என்ற நினைப்பில் இருந்தாங்களாம். இந்நிலையில, தாமரை கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவரான ஷாவானவர் சமீபத்தில் தமிழகம் வந்தார். அப்போது, இலை கட்சி தலைவர்களை சந்திக்க மறுத்துவிட்டாராம். மேலும் சென்னை, வேலூர் கூட்டத்தில் பேசிய தாமரை தலைவர்கள் இலை கட்சியின் இரண்டு முன்னாள் முதல்வர்கள் குறித்து ஏடாகூடமாக பேசிவிட்டனராம். நாடாளுமன்ற தேர்தலில் தாமரை, இலை கட்சிகளுக்கு இடையே கூட்டணி இல்லையென்று இலை நிர்வாகிகள் சந்திக்கும் இடத்தில் எல்லாம் பேசி வர்றாங்க. இந்நிலையில, தேனிக்காரர் தரப்பு தாமரை கட்சியுடன் கூட்டணி சேர்வது எப்படி என்ற கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தேனிக்காரரின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல், அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகள் புலம்பி வர்றாங்க. இதே நிலைமை நீடித்தால், ஒரு குரூப்பாக அப்படியே தாய் கழகமாக இலை கட்சிக்கு சென்றுவிட திட்டமிட்டுள்ளார்களாம். இல்லாவிட்டால் தேசிய அல்லது திராவிட கட்சியில் ஒன்றில் இணைந்துவிடலாம் என்பதே பேச்சாக இருக்காம். தேனிக்காரருடனான நெருக்கம் கட்சி நிர்வாகிகளின் நெருக்கம் நாளுக்கு நாள் குறைந்துபோனதுதான், இந்த அணி மாற்ற எண்ணத்துக்கு காரணமாக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மக்கள் பிரதிநிதிக்கு குடைச்சல் கொடுக்கும் தாத்தா பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் குப்பம் தொகுதியில் புல்லட்சாமி கட்சியில் வெற்றி பெற்றவர் புதிதாக உறுப்பினர் ஆனாராம். இதனால, மக்களிடம் பழகுவது மற்றும் திட்டங்களை நிறைவேற்றி தருவதில் தடுமாற்றமாக இருக்கிறாராம். எந்த பிரச்னைக்கு யாரை பார்க்க வேண்டும் என்பது கூட தெரியாமல் தத்தளிக்கிறாராம். இந்த ‘தெரியாமையே.. அவருக்கு அவமானமாக மாறிபோச்சு…’ சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள ‘பவர்’ தெரியாமல் சாதாரண கவுன்சிலர் போல செயல்பட்டு வருவதால, பொதுமக்களிடம் நிறைய எதிர்ப்பை சந்தித்து வருகிறாராம். இதனை பயன்படுத்தி கடந்த தேர்தலில் சீட்டு கிடைக்காமல் ஒதுங்கிய நாயகர் தாத்தா, அவருக்கு எதிராக அரசியல் செய்கிறாராம். வயசானாலும் அரசியல் ஆசை இன்னும் போகலையாம், அடுத்த முறை இந்த தொகுதியில் மீண்டும் நான்தான் நிற்கப்போகிறேன் என்று தனக்கு வேண்டியவர்களிடம் சொல்லி வருகிறாராம். அதோடு, கோயில், காது குத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தன்னுடைய பழைய செல்வாக்கை பயன்படுத்தி பெயர் போட வைக்கிறாராம். அறங்காவல் குழுவினரும், தொகுதி எம்எல்ஏவின் பெயருக்கு பதிலாக தாத்தாவுக்கு தான் சலாம் போடுறாங்களாம். இதனால குப்பம் தொகுதி எம்எல்ஏவுக்கு மரியாதை தரலையாம். எம்எல்ஏவாக இல்லாதவர்கள் பெயர்களையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை எப்படி போடலாம் எனக்கேட்டாராம். கட்சிக்காரர்களையெல்லாம் சந்திக்கும் எம்எல்ஏ, ஒரே கட்சியில் இருக்கிறோம், வயதும் ஆகிவிட்டது, இன்னமும் இந்த தாத்தாவின் அட்ராசிட்டி தாங்கவில்லையே… அவரை அடக்க ஒடுக்கமா வீட்டு மூலையில் உட்கார வைப்பது குறித்து தன் சீனியர்களிடம் ஐடியா கேட்டு வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசு விழாவை அதிகாரிகள் புறக்கணித்தது யாருக்கு டென்ஷனை ஏற்படுத்தி இருக்காம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நாகர்கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற நாயகர் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். விழாவில் அரசு துறை அதிகாரிகள் ஒருவர் கூட பங்கேற்கவில்லையாம். இதனால டென்ஷனான சபை நாயகர் அரசு விழா ஏற்பாடு சரியில்லை என்று எரிச்சலுடன் கூறினாராம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மாவட்ட அதிகாரி கூட இங்கு வரவில்லையே என்ன பிரச்னையாம் என்று கேட்டுள்ளார். ஆனால் பதில் தான் கிடைக்கலையாம். மாவட்ட தலைமை அதிகாரி ஏன் வரவில்லை என்று அழைத்து கேட்டபோது, அவர் தனக்கு கீழ் உள்ள அதிகாரி ஒருவரை விழா நிறைவு பெறும் நேரத்தில் அனுப்பினாராம்… பல ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்துகொண்ட விழாவில் மாவட்ட அதிகாரிகள் வராமல் தன்னை டென்ஷன் படுத்திவிட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வேதனைப்பட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘அல்வா மாவட்டத்தில் தமிழ் தெரியாத அதிகாரியால் திண்டாடுபவர்கள் யாரு…’’ என்று கேள்வி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பழிக்குப்பழி… கூலிப்படை ஏவுதல் என ரத்த வாடை வீசும் சம்பவங்களால் எப்போதும் அல்வா நகரம் அல்லோல கல்லோலப்படும். இதனாலேயே காவல் துறையில் அதிகாரிகள் முதல் போலீசார் வரை தூக்கமின்றியும், விடுப்பு எடுக்க முடியாமலும் பரிதவிக்கின்றனர். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளவும் அவ்வப்போது முடியாமல் போகிறது. இதனால் அல்வா நகரத்திற்கு மாறுதல் என்றாலே போலீஸ் அதிகாரிகளுக்கு அலர்ஜி என்கின்றனர். தற்போதுள்ள தலைக்கு டங்கில் செந்தமிழ் மட்டுமின்றி இங்கிலீசும் தகராறாம். இதனால் அவர் கதைக்கும் சிலாங்கும் போலீசார், அமெச்சு பணியாளர்களுக்கு புரியாமல் தலையை பிய்த்துக் கொள்கின்றனர். இவர்களுக்கே இப்படி என்றால் புகார் தெரிவிக்க வரும் மக்கள், பாடோ அதோ கதிதானாம். இதற்கு எப்போதுதான் விடிவு காலம் பிறக்குமோ… அல்வா வட்டார காக்கியில் என ஒரே புலம்பறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
The post தேனிக்காரருக்கு டாட்டா காட்ட அவரது அணியில் ஒரு தரப்பு தயாராகி வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.