×

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது செந்தில் பாலாஜி அளித்த புகார் மீது நாளை விசாரணை: மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தகவல்

சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த புகார் மீதான விசாரணை நாளை மேற்கொள்ளப்படும் என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17 மணி நேரதிற்கும் மேல் சோதனையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு 3 ரத்த குழாய் அடைப்பு உள்ளது எனவும் உடனடியாக பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்தனர். இந்த நிலையில் அவர் தற்போது அறுவை சிகிச்சைகாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக அமலாக்கத்துறை விசாரணையின் போது தான் துன்புறுத்தப்பட்டதாகவும், முறையாக நடத்தவில்லை எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்த புகாரை பெற்ற தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் கடந்த 15ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் சந்தித்தார். அந்த விசாரணையின் போது, தான் கைது செய்யும்போது கடுமையாக நடத்தப்பட்டேன்.

என்னை வீட்டில் இருந்து காருக்கு தரதரவென்று இழுத்து சென்று தரையில் போட்டனர். இதனால், என் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ெசந்தில் பாலாஜி கூறியதாக கண்ணதாசன் தெரிவித்தார். மேலும் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: 3 பேர் கொண்ட அமர்வில் நாளை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த புகார் மீதான விசாரணையை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த அமர்வு நீதிபதி பாஸ்கரன் தலைமையில் நடைபெற உள்ளது. உடன் ஆணையதின் உறுப்பினர்கள் நான் (கண்ணதாசன்) மற்றும் ராஜ இளங்கோ இருப்பார்கள். இவ்வாறு கண்ணதாசன் தெரிவித்தார்.

The post அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது செந்தில் பாலாஜி அளித்த புகார் மீது நாளை விசாரணை: மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Human Rights Commission ,Kannadasan ,CHENNAI ,Minister ,Human ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...