
சென்னை: சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் தொடர்பாக, தகவல் உரிமை சட்டத்தில் விவரங்கள் கோரிய விண்ணப்பத்தின் மீது 8 வாரங்களில் முடிவெடுக்குமாறு ஆளுநர் மாளிகை மேல்முறையீட்டு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருவதாக கூறி, சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மனு அனுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அலுவலகம், வழக்கறிஞர் எழுப்பிய கேள்விகள் தகவல் உரிமை சட்டத்தில் வராது. அதுதொடர்பாக தகவல்கள் தங்கள் செயலகத்தில் இல்லை என்று விளக்கம் அளித்திருந்தது. இந்த பதிலை எதிர்த்து ஆளுநர் மாளிகையின் பொது தகவல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி மேல்முறையீட்டு மனுவை வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ளார். மனுவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பில் உயரிய பதவியில் இருந்து கொண்டு தகவல் உரிமை சட்டத்தில் உரிய பதில் அளிக்க தயக்கம் காட்டுகிறார்.
அவர் சனாதன தர்மத்தைப் பற்றி பேசுவதன் அடிப்படை என்ன என்றும் தெரிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு மீது ஆளுநர் மாளிகையின் பொது தகவல் மேல்முறையீட்டு அதிகாரி நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் துரைசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இளங்கோவன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் துரைசாமியின் மேல்முறையீட்டு மனு மீது 8 வாரங்களில் ஆளுநர் மாளிகையின் பொது தகவல் மேல்முறையீட்டு அதிகாரி முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
The post தமிழ்நாடு ஆளுநர் கருத்து தெரிவித்த சனாதன தர்மம் குறித்து 8 வாரத்தில் தகவல் தர முடிவு எடுக்க வேண்டும்: ஆளுநர் மாளிகைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.