×

தென்மலை பரப்பாறு அணையில் சேற்றில் சிக்கிய காட்டெருமை: பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

செங்கோட்டை: ஆரியங்காவு அருகே பரப்பாறு அணையில் சேற்றில் சிக்கிய காட்டெருமையை பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு வனத்துறையினர் மீட்டனர். தமிழக-கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு அருகே செந்தூரணி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள தென்மலை – பரப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை 20 காட்டு எருமைகள் மேய்ச்சலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் வந்தது. இதில் காட்டெருமை ஒன்று மட்டும் எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கியது. அப்போது அங்கிருந்த வன காவலர் குழுவினர் கழுத்து வரை சேற்றில் சிக்கிய காட்டெருமையை பார்த்தனர். இதனை தொடர்ந்து வனவிலங்கு காப்பாளர் அனிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனக்காவலர் குழுவினர் காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டும் காட்டெருமையை கரைக்கு கொண்டுவர முடியவில்லை. இதை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் வனவிலங்கு காப்பாளர் அனி, உதவியாளர் வன உயிரின காப்பாளர் சுதிர், துணை ரேஞ்ச் அலுவலர் சந்தோஷ், பிரிவு வன அலுவலர் ஜெயக்குமார், வன அலுவலர்கள் பினில், ஆர்யா, ஸ்ரீராஜ், பைஜூ, வாட்சர்கள் ஷிபு, அசோகன், ராஜன்பிள்ளை மற்றும் தற்காலிக பணியாளர்கள் சுமேஷ், ஸ்ரீமோன், சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்க முயன்றனர். ஆனால், காலை 11 மணிய வரையும் காட்டெருமையை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து எருமை மாட்டின் முன் இருந்த சேற்றை அகற்றினர். பின்னர் சேற்றில் சிக்கினாலும், காட்டு எருமை தாக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் மரக்கட்டைகளை போட்டு காட்டெருமையின் கொம்புகளில் கயிறுகளை கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். காட்டெருமை மீட்கப்பட்டதை தொடர்ந்து காட்டுக்குள் தானாக ஓடி சென்றது.

The post தென்மலை பரப்பாறு அணையில் சேற்றில் சிக்கிய காட்டெருமை: பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tenmalai Parparau Dam ,Sengottai ,Parparau Dam ,Ariankavu ,Bison ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...