×

24ம் தேதி ஆனித்திருவிழா கொடியேற்றம்: நெல்லையப்பர் கோவில் தேர்கள் தீயணைப்பு துறையினர் சுத்தப்படுத்தினர்

நெல்லை: நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெரும் திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதியம்மன் உள்ளிட்ட 5 தேர்களும் தீயணைப்பு படையினரால் இன்று காலை தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்யப்பட்டது. நெல்லை டவுனில் சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதியம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனிப்பெரும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 10 நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் 9ம் நாள் தேரோட்ட நிகழ்ச்சியில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரள்வார்கள். தமிழகத்தில் 3வது பெரிய தேராக சுவாமி நெல்லையப்பர் கோயில் தேர் உள்ளது. 450 டன் எடை உள்ள இந்த தேர் முழுக்க முழுக்க பக்தர்களால் இழுத்து நிலையம் சேர்க்கப்படுகிறது. 5 தேர்கள் ஒரே நாளில் இழுக்கப்படும்.

இந்த ஆண்டிற்கான ஆனித்தேர் திருவிழா வருகிற 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9ம் திருநாளான ஜூலை 2ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கடந்த சில வாரங்களுக்கு முன் இருந்தே கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்களை சுத்தம் செய்யும் பணி இன்று காலை பேட்டை தீயணைப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன், பிள்ளையார், முருகர், சண்டீகேஸ்வரர் ஆகிய 5 தேர்களையும் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பிற பராமரிப்பு பணிகளும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். திருவிழா ஏற்பாடுகள் முன்னதாகவே மும்முரமாக நடைபெறுவதால் இந்த ஆண்டு விழா தொடங்குவதற்கு முன்னதாகவே கோயில் வளாகம் டவுன் ரதவீதிகள் களைகட்ட தொடங்கியுள்ளது.

The post 24ம் தேதி ஆனித்திருவிழா கொடியேற்றம்: நெல்லையப்பர் கோவில் தேர்கள் தீயணைப்பு துறையினர் சுத்தப்படுத்தினர் appeared first on Dinakaran.

Tags : fire ,Nelliyapar temple ,Nella Swami ,Goelleyapar ,Temple ,Aniper ,Swaami Goeder ,Gandhimatiamman ,Annikiru Festival Flagship ,Fire Department ,Neelleyapar ,
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...