×

திருப்பதி முதல் திருவண்ணாமலைக்கு கிரிவல பக்தர்களுக்காக 100 பஸ்கள் இயக்க திட்டம்

திருப்பதி: திருப்பதி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு குளிர்சாதன பேருந்து விரைவில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில அரசு பஸ் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் நேற்று கூறியதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் இருந்து திருவண்ணாமலைக்கு குளிர்சாதன பேருந்து இயக்க உள்ளோம். இதற்காக தமிழக போக்குவரத்து அதிகாரிகளிடம் அனுமதி கோரி உள்ளோம். அனுமதி கிடைத்ததும் பேருந்து இயக்கப்படும். ஆன்லைன் மூலமாக பதிவு செய்பவர்களுக்கு சலுகை அளிக்கப்படும். தேவையைப் பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தற்போது தினமும் ஒரு விரைவு பேருந்து திருவண்ணாமலைக்கு திருப்பதியில் இருந்து செல்கிறது. பவுர்ணமி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 45 பேருந்துகளும், மே மாதம் 65 பேருந்துகளும், ஜூன் மாதம் 90 பேருந்துகளும் இயக்கப்பட்டது. வருகிற ஜூலை மாத பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதியில் இயக்கப்படும் புதிய பேட்டரி பேருந்துகளில் பயணிகள் குப்பைகளை ஆங்காங்கே போடாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து ஊழியர்கள் மறுசுழற்சி முறையில் பேருந்தின் பயனற்ற உதிரி பாகங்கள் மற்றும் ஆயில் பில்டர்கள் மூலம் குப்பை தொட்டி தயார் செய்துள்ளனர். இந்த குப்பை தொட்டி பேட்டரி பேருந்தில் படிக்கட்டு அருகே வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுற்றுப்புற சூழல் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பதியில் உள்ள நூறு பேட்டரி பேருந்துகளில் 50 பேருந்துகள் திருமலைக்கும், 14 பேருந்துகள் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கும், 12 பேருந்துகள் கடப்பாவிற்கும், 12 பேருந்துகள் நெல்லூருக்கும், 12 பேருந்துகள் மதனப்பள்ளிக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பதி முதல் திருவண்ணாமலைக்கு கிரிவல பக்தர்களுக்காக 100 பஸ்கள் இயக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Thiruvanamalai ,Thirupati ,Tirupati district ,Anamalayar temple ,Thiruvandamalai ,Tiruvanamalai ,Kirivala ,Thiruvandamalayam ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!