×

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்!

உளுந்தூர்பேட்டை

பகலவன் பூமியை இரவுக்கு கைமாற்றிக் கொண்டிருக்கும் மாலை நேரம். தனது மாட்டுவண்டியில் மிளகு மூட்டையுடன் வந்துகொண்டிருந்த வியாபாரிக்கு வழிப்பறித் திருடர்கள் வராமல் இருக்கவேண்டுமே என்று கொஞ்சம் அச்சம். மனித நடமாட்டமில்லை. அடுத்த ஊர் எங்கிருக்கிறது என்றும் சரியாகத் தெரியவில்லை. வண்டி மாடுகள் விரைந்து கொண்டிருந்தன. அஞ்சியதுபோலவே எதிரே ஒரு நிழல் உருவம் வந்து கொண்டிருந்தது. கைகாட்டி நிறுத்தியது. நிற்காமல் போனால் சிக்கல் என்று சற்று நிறுத்தியபோது, முதியவர் உருவம் ஒன்று கைநீட்டிக் கேட்டது. “தலைவலி தாங்கவில்லை. கொஞ்சம் மிளகு இருந்தால் கொடுப்பா.. பத்து போட்டுக்கறேன்”. வெளிச்சம் குறைந்த மாலை நேரத்தை சாதகமாக வைத்துக்கொண்டு வியாபாரி சாதுரியமாக சொன்னார் “அடடா.. இது மிளகு இல்லை பெரியவரே. உளுந்து”.

பெரியவர் “ஓ.. அப்படியா… சரி அப்படியே இருக்கட்டும். பத்திரமா போ” என்று சொல்லிவிட்டு போனபின் வியாபாரிக்கு பெரும் நிம்மதி. தனது சாதுரியத்தை தானே பாராட்டிக் கொண்டு சற்று தொலைவில் ஒதுக்குபுறமாக இருந்த மாரியம்மன் கோயில் அருகே வண்டியை நிறுத்தி, மாடுகளை பூட்டவிழ்த்துவிட்டு தானும் படுத்துக்கொண்டார். விலைமதிப்பு கொண்ட மிளகு மூட்டையை யாரேனும் திருடிவிடப் போகிறார்களே என்று விழிப்புடன் படுத்துக்கொண்டிருந்தார்.

வைகறையில் மீண்டும் இரவு, பூமியை பகல வனுக்கு கைமாற்றித் தர, காலைப் பறவைகள் ஒலி கேட்டு எழுந்த வியாபாரி, தனது மூட்டைகளை எண்ணிப்பார்த்தார். சரியாக இருந்தது. ஒருவேளை மூட்டைகளைப் பிரித்து திருடிவிட்டு, வைத்திருக்கப் போகிறார்கள் என்று ஒரு மூட்டையை பிரித்தார். அதிர்ந்தார். அது உளுந்து. எல்லா மூட்டைகளும் உளுந்தாக மாறி இருப்பதை அறிந்துகொண்டார். நேற்று மாலை மிளகு கேட்ட முதியவரின் குரல் ஞாபகம் வந்தது.

எங்கேயோ பெரும் தவறு நிகழ்ந்துவிட்டது! நேற்று முதியவரை சந்தித்த இடத்தை நோக்கி ஓடினார். அங்கே யாருமில்லை. பரந்த வெளி. குழப்பமாக தேடும்போது அங்கே லிங்கம் ஒன்று இருப்பதை கண்ணுற்றார். முதியவர் நின்ற இடத்தில் லிங்கமா? லிங்கம் இருந்த இடத்தில் முதியவரா? எதுவும் விளங்கவில்லை. இது பரந்த வெளியா? இல்லை பரமவெளியா? என்று ஒரு எண்ணம் வந்தபோது எல்லாம் விளங்கிவிட்டது. பேருண்மைகள் உணரப்படுவது சொற்ப கணங்களில்தானே!

தலைவலி வைத்தியத்துக்காக உங்களிடம் ‘உள்ள மிளகிடுங்கள்’ என்று தன்னிடம் கேட்ட முதியவரிடம் மறுத்து, மறைத்துப் போன அதே வியாபாரி, இப்போது கண்ணுக்கு புலப்படாத முதியவரிடம் ‘உள்ளம் இளகிடுங்கள்’ என்று இறைஞ்சிக் கொண்டிருந்தான். மன்னிக்குமாறும் பிராயச்சித்தமாக கோயில் எழுப்புகிறேன் என்றும் மனமுருக வேண்டிக்கொண்டான். இனி பித்தன் சித்தம் என்று மனதை ஒப்படைத்துவிட்டு ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ திரும்பிவிட்டான். மாரியம்மன் கோயிலில் இருந்த உளுந்து மூட்டைகள் மீண்டும் மிளகாக மாறி இருந்தன.

‘சிவன், அவன் அவர் சிந்தையுள் நின்ற அதனால்’ சொன்னபடியே வியாபாரி, சிவனுக்கு கோயில் கட்டினான். மிளகினை உளுந்தாக மாற்றி அவனை ஆண்ட சிவன்தான் ‘உளுந்தாண்டார்’. அந்த கோயில் ஸ்ரீஉலகநாயகி உடனுறை உளுந்தாண்டார் அமைந்த கோயில். வடமொழியில் மாஷபுரீஸ்வரர். மாஷம் என்றால் உளுந்து. ஸ்ரீலோகாம்பிகா சமேத மாஷபுரீஸ்வரர் தலம். உளுந்து மீண்டும் மிளகாக மாறிய அடையாளமாக அந்த கோயில் இன்றும் மிளகு மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

பிற்காலத்தில், பல்லவ வம்சத்து மலாடர் கோமான் அரசன் காலத்தில் கோயில் விரிவாக கட்டப்பட்டது. வில்வமரம் தலவிருட்சமாக, ஞானதீர்த்த குளம் கோயிலை ஒட்டி அமைந்திருக் கிறது. பங்குனி மாதம் பிற்பகுதியில் ஒரு நாள் காலையில் லோகாம்பிகா பாதத்தில் காலை வெயிலும், ஸ்ரீமாஷபுரீஸ்வரர் பாதத்தில் மாலை வெயிலும் விழும்படி கட்டிடக்கலை அமைந்த கோயில் இது.

ஒருமுறை நெல்லையில் இருந்து ஒரு மாணவி, உளுந்து தானியத்தை உபயோகித்து ஒட்டி, சிவலிங்க வடிவம் செய்து, பெரியவர் காஞ்சி முனிவரிடம் சேர்ப்பித்து ஆசி பெற்றபோது, இது இருக்கவேண்டிய இடம் உளுந்தாண்டார் கோவில் மாஷபுரீஸ்வரர் சந்நதி என்று வழி சொல்ல, அந்த பெண் இந்த கிராமத்தை தேடி வந்து, படத்தை சமர்ப்பித்து வணக்கிச் சென்றார். பிரதோஷ பூஜை இங்கே பிரசித்தியானது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு வடக்கே இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது இந்த புராதனமான கோயில்.

தொகுப்பு: ரமேஷ் கல்யாண்

The post மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்! appeared first on Dinakaran.

Tags : Lundurpet ,earth ,
× RELATED உலகம் முழுவதும் வானில் வர்ணஜாலம்;...