×

பெரியாறு அணைக்கு வரும் நீர் திசை மாற்றப்படுகிறதா?

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ட்ரோன் மூலம் ஆய்வு அவசியம்

*அரசுக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கோரிக்கை

கூடலூர் : பெரியாறு அணைக்கு வரும் நீர் திசை மாற்றப்படுகிறது. இதனால் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை கண்காணிப்பு குழுவின் முன்னிலையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என அரசுக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.கேரளாவின் வெள்ள சோகத்தையும், அன்றைய ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பட்டினி சோகத்தையும் தீர்க்கவே, மேற்கு தொடர்ச்சி மழையிலிருந்து கிளம்பிய இரு நதிகள் இணையும் பெரியாறு ஏரியின் முகத்துவாரத்தில் அணை கட்டி, பாதாளச் சுரங்கம் அமைத்து நதியை தமிழகம் நோக்கி திருப்பினார்கள்.

அப்படி முல்லை மற்றும் பெரியாறு நதிகள் சங்கமிக்கும் ஏரியில் உருவான தண்ணீர் தேக்கடி ஏரி வழியாக வைகையின் கிளை நதியான சுருளியாற்றில் இணைக்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் முதல் நதிகள் இணைப்பு சாத்தியமாக்கப்பட்டது. இந்த பெரியாறு அணையே மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனத்துக்கான முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போக, வறண்ட பிரதேசங்கள் நிறைந்த தென் தமிழக மக்களுக்கு குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இம்மாதம் தொடங்கியது முதலே லேசான மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த 17 நாட்களில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கனஅடியை தாண்டவில்லை. இதில் 5 நாட்கள் முற்றிலும் நீர்வரத்து இல்லை என்ற தகவலும் அதிர்ச்சியாக உள்ளது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, தேதி 16 கடந்தும் முறையாக இன்னும் தொடங்கவில்லை. காலநிலை மாற்றத்தால் ஒருவேளை தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போகுமானால், விவசாயம், குடிநீர், வாழ்வாதாரம் கேள்ளவிக்குறியாகிவிடும். ஆனால் பெரியாறு அணையின் உபரி தண்ணீர் செல்லும் வழியான வண்டிப் பெரியாறு ஆற்றில் தண்ணீர் இடுக்கி அணையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பெரியாறு அணையின் உட்பகுதிக்குள் கட்கி, சபரிகிரி, ப்ளீச்சிங் ஆகிய மூன்று தடுப்பு அணை கட்டி அதன் மூலம், பெரியாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரை இடுக்கி அணைக்கு கொண்டு செல்கிறது கேரளா எனவே ஒன்றிய நீர்வள ஆணையம், பெரியாறு அணை கண்காணிப்பு குழுவின் முன்னிலையில் ட்ரோன் மூலமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதிகளில் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. ஆனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து இயல்பு நிலைக்கு மாறாக குறைந்த அளவே வந்து கொண்டிருக்கிறது. பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை கேரளா மடை மாற்றுகிறது என்று பல ஆண்டு காலங்களாக நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம்.

எங்களது குற்றச்சாட்டை கேரளா இதுவரை மறுக்கவில்லை. பெரியாறு அணையின் நீர்வரத்து கடந்த 3 நாட்களாக ஜீரோ அளவாக மாறி இருக்கிறது. அதாவது ஒரு சொட்டு தண்ணீர் வரத்து கூட முல்லைப்பெரியாறு அணைக்கு வரத்து இல்லை. ஆனால் பெரியார் அணையின் உபரி தண்ணீர் போக்கான வண்டிப் பெரியாறு கம்பி பாலத்தின் கீழ், 200 கன அடி தண்ணீர் இடுக்கி அணையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இது எப்படி சாத்தியப்பட்டது. பிரதான அணையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத நிலையில் உபரி நீர் போக்கில் 200 கன அடி தண்ணீர் எப்படி சாத்தியம், பெரியாறு அணையின் உட்பகுதிக்குள் கட்கி, சபரிகிரி, ப்ளீச்சிங் டேம்களை எந்த சர்வதேச நீரியல் விதிகளின் கீழ் கேரளா கட்டியிருக்கிறது, என்றனர்.இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘‘பிபர்ஜாய் புயலினால், தென்மேற்கு பருவமழை காலதாமதம் ஆவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில், முறையான தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்கிற ஏக்கத்தோடு விவசாயிகள் எல்லோரும் காத்திருக்கிறோம்.

வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, தேதி 16 கடந்தும் முறையாக இன்னும் தொடங்கவில்லை. மாறிவரும் பருவநிலை, காலநிலை மாற்றத்தால் ஒருவேளை தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போகுமானால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களின் விவசாயமும், குடிநீர், வாழ்வாதாரமும் என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

இரு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நல்ல உறவு என்பது, கேரளாவிற்கு சாதகமாகவும், தமிழ்நாட்டிற்கு பாதகமாகவும் உள்ளது. வழக்கமாக ஜூன் 10ம் தேதி முதல் பெரியாறு அணைக்கு, பெரிய அளவிலான நீர் வரத்து இருக்கும் நிலையில், கடந்த 2 நாட்களாக ஜீரோ டிகிரி வரத்தை எட்டி இருப்பது மிகுந்த வேதனைக்குரியதாக இருக்கிறது. எனவே தமிழ்நாடுஅரசு பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான 232.80 சதுர மைல்கள் பகுதியை, கண்காணிப்பு குழுவின் முன்னிலையில் ட்ரோன் மூலமாக ஆய்வு செய்து, இதில் உள்ள சதியை கண்டுபிடிக்க வேண்டும். 999 ஆண்டு கால ஒப்பந்தந்தை கேரளா மீறும் பட்சத்தில் தமிழக அரசு சட்ட நடவடிக்கைக்கு தயாராக வேண்டும்’’, என்றார்.

அணைக்கான நீர்வரத்து முற்றிலும் கேள்விக்குறி

பெரியாறு அணைக்கான நீர் வரத்து கால்வாய்களில் கேரளாவால் கட்டப்பட்டு இருக்கும் கட்கி, சபரிகிரி மற்றும் ப்ளீச்சிங் ஆகிய 3 டேம்களையும் ஒன்றிய நீர்வள கமிட்டி மூலம் அகற்றாவிட்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பருவமழை குறைபாடு காரணமாகவும் மேற்கண்ட 3 தடுப்பணைகளாலும் பெரியாறு அணைக்கான நீர்வரத்து முற்றிலும் கேள்விக்குறியாகும். தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகாவில் புறப்படும் பெரியாறு தண்ணீரை கேரளா தடுப்பணை அமைத்து இடுக்கி அணைக்கு கொண்டு சென்றிருக்காவிட்டால், பெரியாறு அணைக்கு ஆண்டு முழுவதும் 500 கனஅடி வரத்து இருந்து கொண்டே இருந்திருக்கும் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூறுகின்றனர்.

The post பெரியாறு அணைக்கு வரும் நீர் திசை மாற்றப்படுகிறதா? appeared first on Dinakaran.

Tags : Periyaru Vaigai ,Govt Kudalur ,Periyaru ,Huiyaru Dam ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு...