×

இந்த வார விசேஷங்கள்

அமாவாசை
17.6.2023 – சனி

இந்த அமாவாசை வைகாசி மாதம் ஏற்படும் அமாவாசை. சூரியன் ரிஷப ராசியில் பிரவேசிக்க அதே ரிஷப ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் உச்சம் பெறும் நிலையில் நிகழும் அமாவாசை என்பதால், இந்த அமாவாசைக்கு சிறப்பு உண்டு. ஸ்திர வாரமான சனிக் கிழமை ஏற்படுவது விசேஷம். சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய நாள். பிதுர் வர்க்கங்களைக் காப்பாற்றும் பெருமாளுக்கு (சிராத்த தேவதா சிராத்த சம்ரட்ஷகா) உகந்த நாளில், முன்னோர்களை நினைத்து தர்பணாதிகளை முறையோடு செய்தால், நலம் பெறலாம். எள்ளும் நீரும் இறைத்து வழிபாடு இயற்றுவதோடு தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மதியம் தலைவாழை இலை போட்டு, உணவுகளையும் படைத்து, நாம் என்ன வேண்டுகின்றோமோ அதை பிதுர் தேவதைகளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் நிகழும் சுபத் தடைகள் விலகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு நீங்கும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும்.

பிதுர் தேவதையின் அருளும் குலதேவதையின் அருளும் கிடைப்பதோடு பெருமாளின் அருளும் கிடைக்கும் என்பதால் இந்த நாளை தவற விடவேண்டாம். அன்று மதியம் படைத்துவிட்டு யாராவது ஒருவருக்கு அன்னம் இடுங்கள். காக்கைக்கு உணவிட்டு பிறகு சாப்பிடுங்கள். இன்று உபவாசம் இருந்து முன்னோர்களுக்குப் படைத்துவிட்டு சாப்பிடுவது சிறந்தது.

திருவள்ளூர் தெப்ப உற்சவம்
17.6.2023 – சனி

திருவள்ளூர் வீரராகவ சுவாமி பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். இத்தலத்தை ‘‘தையலான் மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன், பொய் இலாத பொன்முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று செய்த வெம்போர் தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள எய்த வெந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே’’ என்று இராவணவதத்தைச் சொல்லி திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசைபிரான், வேதாந்த தேசிகரும் இத்தலம் மீது பாடல்கள் புனைந்துள்ளனர். தாயார் திருநாமம் கனகவல்லி.

அற்புதமான விஜயகோடி விமானத்தின் கீழ் உடல் நோய்களையும், உள்ள நோய்களையும் விலக்கி நல்வாழ்வைத் தரும் ஸ்ரீவைத்திய வீரராகவன் என்ற திருநாமத்தோடு காட்சி தருகிறார். கனகவல்லி தாயார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், உடையவர், கோதண்ட ராமர் ஆகியோர் தனிசந்நதியில் அருள்பாலிக்கின்றனர்.

லட்சுமி நரசிம்மர், சக்கரத் தாழ்வார் சந்நதிகளில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் காணப்படும். தை பிரம்மோற்சவம், சித்திரை பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். தை அமாவாசை, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், சனிக் கிழமை தினங்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். குறிப்பாக, இந்தத் தலத்தில் உள்ள ஹ்ருத்த பாப நாசினி என்னும் திருக்குளம் புகழ் பெற்றது.

கங்கையைவிட புனிதமானது என்று கூறப்படுகிறது. 3 அமாவாசைகளுக்கு பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் தீராத நோயும் (வயிற்று வலி, கைகால் நோய், காய்ச்சல்) குணமாகும் என்பது நம்பிக்கை. தடைபட்ட திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் பெற, அனைத்து கவலைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெற இத்தல பெருமாள் அருள்பாலிப்பார். உடலில் உள்ள மரு, கட்டி நீங்க தீர்த்தக் குளத்தில் பால், வெல்லம் சேர்ப்பது வழக்கம். கோயில் மண்டபத்தில் உப்பு, மிளகு சமர்ப்பிப்பதும் வழக்கம். அமாவாசை தினத்தில் இங்கே ஏராளமான பக்தர்கள் கூடி முன்னோர்களுக்கு தர்பணாதிகளைச் செய்வார்கள். இன்று மாலை உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தெப்ப உற்சவத்தில் எழுந்தருள்வார். தொடர்ந்து தெப்ப உற்சவம் நடைபெறும்.

ஆஷாட நவராத்திரி ஆரம்பம்
18.6.2023 – ஞாயிறு

ஒரு காலத்தில் அம்பிகை வழிபாடு தாய் வழிபாடாக மிகவும் சீரும் சிறப்புடன் விளங்கியது. நவராத்திரி என்றால் புரட்டாசி நவராத்திரிதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் 12 மாதங்களிலும் அம்பிகையை நினைத்து 12 நவராத்திரிகள் கொண்டாடிய காலமும் உண்டு. இப்பொழுது பிரதானமாக நான்கு நவராத்திரிகள் இருக்கின்றன. வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி. இதில் ஆஷாட நவராத்திரி இன்று ஆரம்பம்.

ஆஷாட மாதம் என்பது சந்திரமான முறையில் ஆனி மாத அமாவாசையில் தொடங்கி ஆடி மாத அமாவாசை முதல் தினத்தோடு முடிவடையும். ஆனி மாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி 9 நாட்கள் இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படும். நவராத்திரியில் வாராகி அம்மனை வழிபடுவதால் நவ நவமான திருப்பங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டு, சந்தோசமும் ஐஸ்வரியமும் ஏற்படும். வாராகி அம்மன் சப்தமாதர்களில் ஒருவர். அன்னை வராக முகத்தோடு காட்சி தருவாள். உழவுத் தொழிலுக்குப் பிரதானமாக இருக்கிறாள்.

அதிலும் குறிப்பாக, இந்த நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி விசேஷமானது. எந்த வேண்டுதல்களும் அப்படியே நூற்றுக்கு நூறு பலிக்கும். தஞ்சை பெரிய கோயிலில் எப்பொழுதும் ஆஷாட நவராத்திரி மிக விசேஷமாக கொண்டாடப்படும். இந்த நாளில் நவதானிய அலங்காரம், தேங்காய் பூ, சந்தனம், குங்கும அலங்காரம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஒன்பது நாள்கள் தினமும் வீட்டில் பூஜை அறையில் கோலமிட்டு, விளக்கேற்றி, அன்னை வராகியை வழிபட்டால் எப்பொழுதும் குறைவற்ற செல்வமும் தானிய விருத்தியும் ஏற்படும். மாணவ மாணவிகள் வராகி அம்மனை வழிபட சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

சதுர்த்தி விரதம்
22.6.2023 – வியாழன்

இன்று குருவினுடைய நாள். ஆதிசேஷனின் ஆயில்ய நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய இந்த நாளிலே சதுர்த்தி விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. சதுர்த்தி விரதம் விநாயகப் பெருமானைக் குறித்து இருக்க வேண்டிய விரதம். இன்று காலை முதல் மாலை வரை உபவாசம் இருந்து, மாலையில் அருகாமையில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று, நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு வணங்க வேண்டும்.

இன்று நாள் முழுவதும் இயன்றளவு விநாயகர் அகவல் பாராயணம் செய்ய பலப் பல நன்மைகள் வந்து சேரும். எல்லா சங்கடங்களையும் தடைகளையும் விலக்கி பரம மங்கலத்தைத் தரும் இந்த விரதத்தை அனைவரும் இருக்கலாம்.

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

என்ற பாடல்களை இன்று பாராயணம் செய்யவும்.

மாணிக்கவாசகர் குரு பூஜை விழா
23.6.2023 – வெள்ளி

சைவ சமயக் குரவர்களின் ஒருவரான மாணிக்கவாசகர் நால்வரில் ஒருவர். முதல் மூவர் தேவாரம் பாட, மாணிக்கவாசகர் பாடியது திருவாசகமும் திருக்கோவையாரும். பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்து, பின் சிவபக்தி கொண்டு, சிவபெருமானால் உபதேசம் செய்யப்பட்டு, மாணிக்கவாசகர் என்ற திருநாமத்தோடு புகழ் பெற்றார். மதுரைக்கு பக்கத்திலே திருவாதவூர் என்பது இவருடைய அவதாரத்தலமாகும். இவர் பாடிய திருவாசகத்துக்கு உருகாதார் யாருமில்லை. அத்தனை உருக்கமான பாடல்கள். இவரைக் குறித்து வடலூர் வள்ளல் பெருமான் மிக அருமையாக ஒரு பாடலை இயற்றி இருக்கிறார்.

“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!’’
“வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!’’

இந்தப் பாடல்கள் இவருடைய பெருமையைக் கூறும். இவர் இயற்றி அருளிய சிவபுராணம், தினசரி ஒவ்வொரு சைவர்களும் காலையும் மாலையும் பாராயணம் செய்யும் நூலாகும். அதைப்போலவே இவர் அருளிச்செய்த திருவெம்பாவையும் திருப்பள்ளி எழுச்சியும் மார்கழி மாதம் முழுமையும் சைவர்களால் பாடப்பெறும் நூலாகும். நரியை பரியாக்கிய என்னும் திருநாவுக்கரசர் பாடலின் மூலம் இவர் திருநாவுக்கரசருக்கு முந்தியவர் என்ற கருத்தும் உண்டு. ஞான நெறியை பின்பற்றிய இவர் மிகக் குறுகிய காலமாக 32 ஆண்டுகளை வாழ்ந்து ஆனி மாதம் மக நட்சத்திரத்தில் சிதம்பரத்தில் நடராஜப் பெருமானின் திருவடிகளில் புகுந்தார்.

மாணிக்கவாசகரின் குருபூஜை எல்லா சிவாலயங்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவர் சாயுஜ்ய முக்தி அடைந்த சிதம்பரத்தில் ஆனி உத்தர தரிசனத்தை ஒட்டி, மிக மிகச் சிறப்பாக மணிவாசகருடைய குருபூஜை கொண்டாடப்படுகிறது.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : New Moon ,Vaikasi ,Zodiac ,
× RELATED பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 16ல் துவங்குகிறது