×

சொந்தமாக வரலாறு இல்லாதவர்கள் அடுத்தவர்களின் வரலாறை அழிக்க முயற்சி: ஒன்றிய அரசு மீது கார்கே சாடல்!!

புதுடெல்லி: டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர்களின் அருங்காட்சியகம் என ஒன்றிய அரசு பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் டெல்லியில் கட்டப்பட்ட தீன் மூர்த்தி பவன், சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்து வந்தது. இந்த இல்லத்தில் நேரு இறக்கும் வரை 16 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார். எனவே அவரது நினைவாக, கடந்த 1964ம் ஆண்டு தீன் மூர்த்தி பவன், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது.

இந்த நேரு நினைவு சொசைட்டியின் (என்எம்எம்எல்) தற்போதைய தலைவராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளார். இந்த அருங்காட்சியகத்தின் பெயரில், நேரு பெயர் நீக்கப்பட்டு பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் சொசைட்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக ஒன்றிய கலாச்சார அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த புதிய மாற்றத்தை தொடர்ந்து அருங்காட்சியகத்தில் 14 முன்னாள் பிரதமர்களின் நினைவுகள், சாதனைகள் பற்றிய புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த பெயர் மாற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜுனே கார்கே, சொந்தமாக வரலாறு இல்லாதவர்கள் அடுத்தவர்களின் வரலாறை அழிக்க முயற்சிப்பதாக விமர்சனம் செய்துள்ளார். அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் நேருவின் புகழ் குறைந்துவிடாது என்றும் தெரிவித்துள்ளார். அதே போல், காங்கிரஸ் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘அற்பத்தனம் மற்றும் பழிவாங்கும் செயல் என்றால் அதன் பெயர் மோடி. கடந்த 59 ஆண்டுகளாக நேரு நினைவு அருங்காட்சியகம் இருந்துள்ளது. இனி அது பிரதம மந்திரி அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும். இந்திய தேசிய அரசின் அரசியல் சிற்பியின் பெயர் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க, மறைக்க மோடி எதையும் செய்வார். பாதுகாப்பின்மை எண்ணம் காரணமாக சிறுமையைச் சுமந்து திரியும் சிறிய மனிதர்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

The post சொந்தமாக வரலாறு இல்லாதவர்கள் அடுத்தவர்களின் வரலாறை அழிக்க முயற்சி: ஒன்றிய அரசு மீது கார்கே சாடல்!! appeared first on Dinakaran.

Tags : Carke Sadal ,Government of the Union ,New Delhi ,Union Government ,Nehru Memorial Museum and Library ,Delhi ,Prime Minister's Museum ,Carke Soddal ,
× RELATED ஒன்றிய அமைச்சரின் தாய் மரணம்