×

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை பசுமையாக மாற்ற 2,500 செடிகள்: அங்காடி நிர்வாகம் ஏற்பாடு

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை பசுமையாக மாற்றும் வகையில், அங்காடி நிர்வாகம் சார்பில் 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், 1000 மரக்கன்றுகள் நடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள சென்டர் மீடியன் மீது சாலையோர வியாபாரிகள் காய்கறி, பழம் ஆகிய பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பேருந்துகள் திரும்பும் வழியில் காய்கறி, பழ கடைகளை வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அந்த பகுதியும் அசுத்தமாக காணப்பட்டது.

எனவே அங்காடி நிர்வாக சார்பில், சாலையோர கடைகளை எடுக்கும்படி பலமுறை கூறியும் வியாபாரிகள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வியாபாரம் செய்துவந்தனர். இந்த நிலையில், அங்காடி நிர்வாகம் சார்பில், சென்டர் மீடியனில், விதவிதமாக அழகான செடிகளை அமைத்து, அவற்றை சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளனர். இதனால் அந்த பகுதி அழகாக காணப்படுவதுடன் போக்குவரத்து நெரிசலும் குறைந்துள்ளது. இதுகுறித்து, அங்காடி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை பசுமை பரப்பாக மாற்றும் வகையில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இன்னும் 1,000 செடிகளை நடும் பணி நடைபெற்று வருகிறது’’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை பசுமையாக மாற்ற 2,500 செடிகள்: அங்காடி நிர்வாகம் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்