×

ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி சிவன் கோயிலில் பிரதோஷம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி சிவன் கோயிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநில எல்லைக்கு உட்பட்ட சுருட்டப்பள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. அனைத்து கோயில்களிலும் லிங்க வடிவில் காட்சியளிக்கும் சிவபெருமான், இங்கு மனித வடிவில் பள்ளி கொண்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பதுதான் விசேஷம். இக்கோயிலில் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி உள்பட பல்வேறு முக்கிய விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன் தினம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சுருட்டப்பள்ளி சிவன் கோயிலில் காலை முதல் விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா, தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, பள்ளி கொண்டீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நேற்று முன் தினம் இரவு வால்மீகீஸ்வரர் எதிரே உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல், வில்வ இலை, மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவரான சிவன் – பார்வதி கோயிலைச் சுற்றிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இப்பூஜைகளை தலைமை குருக்கள் கார்த்திகேசன் சிவாச்சாரியார் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் சேர்மன் ஏவிஎம். முனிசந்திரசேகர், உறுப்பினர்கள் ஆனந்த், கவிதா சந்தீப் உள்பட கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி சிவன் கோயிலில் பிரதோஷம் appeared first on Dinakaran.

Tags : Surutapalli Shiva Temple ,Uthukottai ,Oothukottai ,Pradosha ,Suruttapalli Shiva Temple ,Andhra ,
× RELATED ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில்...