×

குஜராத்தை தாக்கிய பிபர்ஜாய் புயல் இருளில் மூழ்கிய 1000 கிராமங்கள்: வீடுகள் சேதம்; உயிர் பலியில்லை

அகமதாபாத்: குஜராத்தை தாக்கிய பிபர்ஜாய் புயலால் 1000 கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. 600க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து பல வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் மாலை 6.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது. இதில் 140 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்று மற்றும் மழையால், கட்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் பல மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கட்ச் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. ஏற்கனவே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையிலிருந்து 10 கிமீக்கு சுற்றி உள்ள கிராம மக்கள் வெளிேயற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். இதனால் உயிர்சேதம் முற்றிலும் தவிர்க்கப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். புயல் கரையை கடந்ததை தொடர்ந்து தேசிய மீட்பு படை மற்றும் போலீசார் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவோடு இரவாக, புயலில் விழுந்த மரங்கள் சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

4,600 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், 3,580 கிராமங்களில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 1,000 கிராமங்கள் இருளில் மூழ்கி இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர். 5,120 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதே போல் 600க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சரிந்துள்ளன. 9 கட்டிட வீடுகளும், 20 குடிசை வீடுகளும் முற்றிலும் இடிந்ததாகவும், 2 கட்டிட வீடுகள், 474 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மீட்புப்படை கமிஷனர் அலோக் குமார் பாண்டே கூறி உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post குஜராத்தை தாக்கிய பிபர்ஜாய் புயல் இருளில் மூழ்கிய 1000 கிராமங்கள்: வீடுகள் சேதம்; உயிர் பலியில்லை appeared first on Dinakaran.

Tags : Cyclone Bibarjai ,Gujarat ,AHMEDABAD ,Cyclone ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கூரியர் பார்சல்களில் ரூ.1.12 கோடி கஞ்சா பறிமுதல்