×

புதிதாக அமைக்கப்படும் பயணியர் நிழற்குடை அருகே பேருந்து நின்று செல்ல இட வசதி செய்து தரவேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மதுராந்தகம்: மதுராந்தகம் புறவழிச்சாலை பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை அருகே பேருந்துகள் நின்று செல்ல போதிய இடவசதி செய்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் ஏரிக்கரையில் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது. விழுப்புரம், திருச்சி, தஞ்சை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.

அது மட்டுமல்லாமல் மதுராந்தகம் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த பேருந்து நிறுத்தம் வந்து இங்கிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக அரசு வேலை, தனியார் தெழிற்சாலை, பள்ளி, கல்லூரி, வீட்டு சுபநிகழ்ச்சிகள் என பல்வேறு காரணங்களுக்காக சென்னை நோக்கி சென்று வருகின்றனர். இதில், பயணிகள் நிழற்குடை இல்லாதால் பயணிகள் பேருந்துக்காக சாலையில் காத்திருக்கும் நிலை இருந்தது. இதனால், வெயில் மழை காலங்களில் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பேருந்து ஏற காத்திருக்கும் நேரத்தில் ஒதுங்கிநிற்க இடவசதி இல்லை. இதனால் பேருந்து சாலையிலேயே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்தது. இதே நிறுத்தத்தின் எதிரில் சென்னை-திருச்சி மார்க்கமாக உள்ள நிறுத்தத்தில் பயணிகள் வசதிக்காக 20 வருடங்களுக்கு முன்பாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், திருச்சி- சென்னை மார்க்க நிறுத்தத்தில் மட்டும் இதுவரை நிழற்குடை அமைக்கவில்லை. இதனால், பயணிகள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் பயணிகள் ஒதுங்கி நிற்க பயணியர் நிழற்குடை அமைக்கவேண்டும் என தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.

இதேபோன்று, மதுராந்தகம் பகுதி அரசியல் கட்சியினரும் கையெழுத்து இயக்கம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது மதுராந்தகம் புறவழிச்சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், பேருந்துகளை சாலை ஓரத்தில் ஒதுங்கி நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யாமல் உள்ளது. எப்போதும், பேருந்து நிறுத்தத்தில் பஸ்கள் ஒதுங்கி நிற்க சற்று அகலமான சாலை அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் இதுவரை இப்பகுதியில் இந்த மாதிரி இல்லாமல் சாலையிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் இறங்கிச் செல்கின்றனர்.

இதனால், பின்னால் வரும் வாகனங்கள் மூலமாக விபத்துக்கள் ஏற்படும் நிலை இருந்துவந்தது. தற்போது பஸ் நிறுத்தம் அமைக்கும் நிலையில் இப்பகுதி சாலையை சற்று அகலப்படுத்தி இருக்கலாம். அப்போது, பேருந்துகள் ஒதுங்கி நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வசதியாக இருந்திருக்கும். ஆனால், தற்போதும் அவ்வாறு செய்யவில்லை. இதனால், பழைய நிலை போன்று பேருந்துகள் சாலையில் நின்று செல்லும் நிலை உள்ளதால் மீண்டும் விபத்துக்கள் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக பேருந்து ஓட்டுநர்களும், பயணிகளும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இதுகுறித்து அரசு விரைவு பேருந்து ஓட்டுநர் கூறுகையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் சாலையில் பலர் மதுராந்தகம் புறவழிச்சாலையில் இறங்கும் நிலை உள்ளது. இந்த இடத்தில் பேருந்துகளை ஒதுக்கி நிறுத்த போதிய இடம் இல்லாததால் அதிகாலை நேரங்களில் திருச்சி- சென்னை மார்க்கத்தில் மதுராந்தகத்தில் புறவழிச்சாலையில் பேருந்தை நிறுத்தினால் பின்னால் வரும் வாகனங்கள், நிற்கும் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. தற்போது இந்த இடத்தில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால் அதே இடத்தில் பேருந்து சாலையை விட்டு ஒதுங்கி நின்று செல்ல போதிய இடவசதியை ஏற்படுத்தி தரவேண்டும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் விபத்துக்கள் தடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post புதிதாக அமைக்கப்படும் பயணியர் நிழற்குடை அருகே பேருந்து நின்று செல்ல இட வசதி செய்து தரவேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nizhalkudai ,Madhurandakam ,Madurandakam ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...