×

பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி

பல்லாவரம்: மாங்காட்டில் பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனிக்கு, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அடிக்கடி நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சுற்று சூழலை பாதிக்கும் வகையில் தனியார் பிளாஸ்டிக் நிறுவனம் இயங்கி வருவதாக மாங்காடு நகராட்சி ஆணையர் சுமாவிற்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், நேற்று அவரது தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாங்காடு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி அபாயகரமான பொருட்களை மறுசுழற்சி செய்து வந்த நிறுவனம் ஒன்று இயங்கி வருவது கண்டறியப்பட்டது.

அங்கு சோதனை செய்து பார்த்தபோது, உரிய அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் மூல பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்வதும், காற்று மாசுபடும் வகையில் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து அபாயகரமான முறையில் மறுசுழற்சி செய்து வந்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உடனடியாக உரிய உரிமம் பெற வேண்டும். அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தனியார் நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்திவிட்டு சென்றனர். மாங்காடு நகராட்சி உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் உள்ளதா என்பது குறித்து தீவிர சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

The post பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Mangat ,
× RELATED உடல் பருமனை குறைப்பதற்கான...