×

திருவிக நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு: கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு

பெரம்பூர்: திரு.வி.க நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம், தூய்மை பணிகளை மேற்கொள்ள, கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் திருவிக நகர் மண்டலம் மற்றும் ராயபுரம் மண்டலம் ஆகியவற்றில், தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்வது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம், என்று மாநகராட்சி அறிவித்தது. அதன்படி, கருத்து கேட்பு கூட்டம், திருவிக நகர் மண்டலம் 78வது வார்டுக்கு உட்பட்ட அறிஞர் அண்ணா மாளிகையில் நேற்று காலை நடைபெற்றது. இதில் வடக்கு மற்றும் மத்திய வட்டார துணை ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், திடக்கழிவு மேலாண்மை தலைமை பொறியாளர் மகேஸ்வரி, 6வது மண்டல அதிகாரி முருகன், 5வது மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன், 5, 6வது மண்டல செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

முதலில் திடக்கழிவு மேலாண்மை குறித்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறியபோது பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், தனியாருக்கு தூய்மை பணியை வழங்குவதில் எங்களுக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது, எழுத்துப்பூர்வமாக மாநகராட்சி அதிகாரிகள் எங்களால் தூய்மை பணியை மேற்கொள்ள முடியவில்லை என எழுதி தாருங்கள், அதன்பிறகு தனியாருக்கு விடுவது குறித்து யோசிக்கலாம் எனவும், தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் அதிகளவில் இந்த பணியில் இருப்பதால் இதனை தனியாருக்கு விடும் பட்சத்தில் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் தனியார் மயமாக்குவது என்றால் மாநகராட்சி உயர் அதிகாரிகளில் இருந்து அனைவரையும் தனியார் மயமாக்குங்கள் அடிமட்ட தொழிலாளர்களை மட்டும் தனியார் மயமாக்குவது எந்த வகையில் நியாயம் என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

தனியார் மயமாக்கல் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். ஒரு கட்டத்தில், தனியார் மயமாவதை நாங்கள் ஒட்டுமொத்தமாக எதிர்கிறோம், எனக்கூறி அனைவரும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மண்டபத்திற்குள் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து அவர்களது கேள்விக்கு திடக்கழிவு மேலாண்மை தலைமை பொறியாளர் மகேஸ்வரி பதில் கூற எழுந்து நின்றார். ஆனால் அங்கிருந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் அவரை பேச விடாமல் தொடர்ந்து கோஷமிட்டதால் ஒரு கட்டத்தில் அவர் உங்களது கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதனையடுத்து மற்ற அதிகாரிகளும் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதனால் கருத்து கேட்பு கூட்டம் பெரும் சலசலப்புடன் முடிவடைந்தது.

The post திருவிக நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு: கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvik Nagar ,Rayapuram ,Perambur ,Dinakaran ,
× RELATED இந்தியாவுக்கே சவால்விடும் முதல்வராக...