×

எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ரெண்டு மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘இலை கட்சியின் மாஜி அமைச்சர்கள் இரண்டு பேர் எதற்காக சண்டை போட்டாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என 2 அணியிலும் இரண்டு மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருக்காங்க. இந்நிலையில, கடலோர மாவட்டத்தில் சேலம்காரர் அணிய சேர்ந்த மணியானவர், மில்க் பெயரில் உள்ள 2 மாஜி அமைச்சர்கள் இருக்காங்களாம். இவர்கள் மூன்று பேரும் பதவிக்கு போட்டியிடுவதுதான் பிரச்னைக்கு காரணமே. இந்நிலையில, நேற்று முன்தினம் கடலோர மாவட்டத்தில் 2 படகுகள் கடலில் மூழ்கி 7 மீனவர்கள் ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வர்றாங்க. தொகுதியில் உள்ள மீனவர்கள் என்பதால் அவர்களை பார்த்து ஆறுதல் சொல்ல ‘மணியானவர்’ அவரது ஆதரவாளர்களுடன் முதலில் வந்துவிட்டால்.. அவருக்கு மீனவர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்து விடும் என மில்க் பெயர் மாஜி அமைச்சர் நினைச்சாராம். தொடர்ந்து, மில்க் பெயரை கொண்டவர் தனது ஆதரவாளர்களுடன் ஆஸ்பத்திரிக்கு முதலாவதாக வந்து ஆறுதல் கூற போனாராம்.

இந்த தகவலை தனது ஆதரவாளர்கள் மூலம் தெரிந்து கொண்ட மணியானவர், மாஜி மில்க் மந்திரி மீது உச்ச கட்ட கோபத்துக்கு போனாராம். கடலோர மாவட்டத்தில் மணியானவர் செயல்பாடுகள் சரியா இல்லாததால் அவரிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவிய பிடுங்கி மில்க் பெயர் கொண்டவருக்கு கொடுத்து விடலாம் என சேலம்காரர் யோசனையில் இருந்து வருகிறார். இந்த நேரத்தில் மில்க் பெயர் கொண்டவர், தனது ஆதரவாளர்களுடன் ஜிஹெச்சுக்கு வந்து பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு சென்றுவிட்டாராம். இதை கேள்விப்பட்ட மணியானவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டென்ஷனில் இருக்காங்களாம். மில்க் பெயர் கொண்டவரை ஏதாவது செய்து கவுக்க வேண்டும் என்ற முடிவோடு ேவறு பிளான் போட்டு இருக்காங்களாம். அதுல மில்க் மாஜி மந்திரி சிக்குவாரா இல்லை தப்பிப்பாரா என்பது தெரியும்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உறவுகளுக்காக கடத்தல் காரர்களுடன் உறவாடும் காக்கி அதிகாரி பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘குமரி மாவட்டத்தில் கடல் பகுதி கொண்ட காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் உயரதிகாரி, தனது ரத்த உறவுகளுக்காக அதிகமாக உழைக்கிறாராம். குமரி தான் இவருக்கு சொந்த மாவட்டம். ஆனால் பிழைப்புக்காக இவரது குடும்பம், வேறொரு மாவட்டத்தில் குடியேறினாங்க. அதயே சொந்த மாவட்டமா காட்டி, இவரு குமரி மாவட்டத்துக்கே வந்துட்டாராம். சொந்த மாவட்டத்துக்காரங்க, அதே மாவட்டத்தில் இன்ஸ்சாக இருக்க முடியாது. இதனால, பிழைப்புக்கு போனதையே சொந்த மாவட்டமாக தன் சர்வீஸ் ரெக்கார்டில் காட்டிவிட்டாராம். தன் சொந்த பகுதிக்கு வந்த இன்ஸ்சை ஈ மொய்ப்பது போல் ரத்த உறவுகள் சுத்தி சுத்தி வர்றாங்களாம்.

அவர்களுக்காக பல்வேறு சிபாரிசுகளை செய்யும் இன்ஸ்., கனிம வள கடத்தல் தொழில் செய்பவர்களுடன் அதிக நெருக்கமாக இருப்பதாக பேசுறாங்க. கடத்தலை தடுக்க தனிப்படை, பறக்கும் படை இருக்கிறதாம். அவர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, இவரு பணியில் உள்ள காவல் நிலையம் வழியாக எளிதில், எல்லை கடந்து செம்மண் ஏற்றிய டாரஸ் லாரிகள் பறக்குதாம். அதுமட்டுமில்லாமல், கஞ்சா, திருட்டு மது அத்தனையும் விக்குதாம். சிவில் சம்பந்தமான வழக்குகளை வாடகை ரூமில் வைத்து டீல் செய்கிறாராம். அதுல நிறைய பணம் புரளுதாம். இது பற்றி மாவட்ட உயர் அதிகாரிக்கும் தகவல் போய் இருக்காம்… உறவுகளுக்கு உதவ போய் இப்போது இன்ஸ் டென்ஷன்ல இருக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டிரான்ஸ்பர் வந்தும் போக முடியவில்லையே என்று வருத்தத்தில் இருக்கும் அதிகாரி யார்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உயர் அதிகாரி ஒருவர் இடமாறுதல் பெற்ற பின்னரும் அவரை பணியில் இருந்து விடுவிக்கவில்லையாம். காரணம், அவரது இடத்தில் நியமிக்கப்பட்ட அலுவலர் பணியில் வந்து சேரவில்லை. இந்த வேளையில் மற்றொரு உயர் அதிகாரியிடம் சென்று தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அதிகாரி மறுத்துவிட்டாராம். இதுக்கு மேலே மாவட்ட அதிகாரியிடம் இறங்கி போய் என்னை விடுவித்துவிடுங்க என்று கேட்க மாட்டேன் என்று மாவட்ட அதிகாரி மற்றவர்களிடம் புலம்பி தீர்த்துவிட்டாராம். இப்போது முதல் உத்தரவை ரத்து செய்து வேறு அதிகாரி ஒருவரை குமரி மாவட்டத்துக்கு நியமித்துள்ளார்களாம். அவர் எப்போது வருவது நான் எப்போது இங்கிருந்து செல்வது என்று நேரில் பார்ப்பவர்களிடம் உயர் அதிகாரி வேதனையோடு சொல்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சம்திங் வசூலிக்க எந்த மாவட்டத்துல ஏஜென்டுகளை நியமிச்சிருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டுப்பாடிக்கும் குடியேற்றத்துக்கும் இடையில இருக்குற 4 எழுத்து காக்கிகள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்ல பெயரின் முடிவுல மணி, மூர் என்று முடியுற ஊராட்சிகள்ல மணல் கடத்தல் தடையில்லாம நடக்குதாம். இந்த மணல் கடத்தலுக்கு பச்சை கொடி காட்டுறதே அந்த 4 எழுத்து காக்கிகள் நிலையத்துல இருக்குற ஸ்டார் காக்கிகள் தானாம். இவங்க தான் எப்போ, எந்த நேரத்துல மணல் கடத்தணும்னு சொல்வாங்களாம். அதன்படி மாட்டுவண்டிகள்ல கடத்தல் ஜோரா நடக்குதாம். இதுல, மணல் அள்ளுறவங்ககிட்ட சம்திங் வாங்குறதுக்கு 4 பேரை ஏஜென்டுகளாக நியமிச்சிருக்காங்களாம். இவங்கதான் எல்லா வசூலையும் பார்த்துக்குறாங்களாம். மணல் கடத்துற ஒரு நாளைக்கு 1 எல் கொண்டுபோய் சேர்க்குறாங்களாம். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமில்லாம கவர்மென்ட், அகற்றி வர்ற நேரத்துல, நீர்நிலைகள்ல கனிமத்தை கொள்ளையடிக்க காக்கிகள் துணை போவது பற்றி வருவாய் துறையினர் வேதனையோடு பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ரெண்டு மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Wendy Maji ,Maji ,Leaf Party ,Peter ,
× RELATED நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி...