×

டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு: 3.42 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.42லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசனவசதி பெறும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறந்து விடப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 12ம்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேட்டூரில் திறக்கப்பட்ட இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக நேற்றுமுன்தினம் நள்ளிரவில் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வந்தடைந்தது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக நேற்று காலை கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முன்னதாக கல்லணையில் உள்ள ஆதிவிநாயகர், ஆஞ்சநேயர், கருப்பண்ண சாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பாலத்தில் உள்ள மன்னன் கரிகாலன், ராஜராஜசோழன் மற்றும் அகத்தியர், கல்லணையை கட்டிய பொறியாளர் ஆர்தர் காட்டன், விவசாயி, மீன்பிடிக்கும் பெண், காவிரி அம்மன் ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, பொத்தானை அமுக்கி தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவப்பட்டன. இதேபோல் விவசாயிகள், காவிரி ஆற்றை வணங்கி மலர்களையும், நவதானியங்களையும் தண்ணீரில் தூவி விவசாயம் செழிக்க வேண்டி கொண்டனர். காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தலா 500 கன அடியும், கல்லணை கால்வாயில் 100 கன அடியும் திறந்து விடப்பட்டது. நீர்வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். இந்த தண்ணீர் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.42லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசனவசதி பெறும். இந்த தண்ணீர் 10 நாட்களில் கடைமடை பகுதிகளை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு: 3.42 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் appeared first on Dinakaran.

Tags : Kallani ,Kuruai ,Thanjavur ,Kallanai ,Kuruvai ,Cauvery ,Dinakaran ,
× RELATED கல்லணை கால்வாய் 2ஆது கட்ட...