×

18 மாவட்டங்களில் சதம் தமிழ்நாட்டில் சில இடங்களில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு இடங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகரித்ததை அடுத்து சென்னை, மதுரை, வேலூர், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. 18 மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதின் அறிகுறியாக அரபிக் கடலில் அதிதீவிர புயல் உருவானது. அது நேற்று முன்தினம் குஜராத் அருகே கரையைக் கடந்தது. அரபிக் கடலில் புயல் தீவிரம் அடைய தொடங்கியதில் இருந்து கடல் பரப்பில் உள்ள ஈரப்பத காற்றை உறிஞ்சத் தொடங்கியது.

அதே நேரத்தில் வங்கக் கடல் பகுதியிலும் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகி மியான்மர் நோக்கி நகர்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளின் காரணமாக ஈரப்பதம் உள்ள காற்று முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு வறண்ட வானிலை நிலவியது. அதன் காரணமாக பல இடங்களில் இயல்பைவிட கூடுதலாகவே வெப்பம் தகித்தது. சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், மதுரை மற்றும் வேலூர், சென்னை பகுதிகளில் இயல்பைவிட 4.9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தது. அதனால், அங்கு 106 டிகிரி (பாரன்ஹீட்) வெயில் கொளுத்தியது.

மேலும், கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, நாகப்பட்டினம், திருச்சி பகுதிகளில் 102 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, அதிராமபட்டினம், கோவை உள்பட 18 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. அடுத்த சில தினங்களுக்கும் 102 டிகிரி முதல் 106 டிகிரி வரை வெயில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக வால்பாறை, சின்னகல்லாறு, பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்று, வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 20ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகம் வரை வீசும். இந்த நிலை 20ம் தேதி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 18 மாவட்டங்களில் சதம் தமிழ்நாட்டில் சில இடங்களில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Tags : Satham ,Tamil Nadu ,CHENNAI ,Madurai ,Vellore ,Karur Paramathi ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...