×

கூடுவாஞ்சேரி அருகே காவல் துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே ஒத்திவாக்கத்தில், காவல் துறையினர் பங்கேற்கும் துப்பாக்கி சுடும் போட்டியை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் காவல் துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தமிழக போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடத்துவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான துப்பாக்கி சுடும் போட்டியை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை தொடங்கி வைத்தார்.

பின்னர், டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக காவல் துறையில் 2023ம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இன்று (நேற்று) ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில், ரைபிள் பிரிவு, பிஸ்டல், ரிவால்வர் பிரிவு மற்றும் கார்பைன் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறும். முதலாவதாக இன்று (நேற்று) ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது. நாளை (இன்று) மற்ற போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.

இதற்கு முன்பு கடந்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் உள்ள நான்கு காவல் மண்டலங்கள் மற்றும் தனிப்பிரிவில் உள்ள அனைத்து காவல் ஆளினர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில், 11 அணிகளில் இருந்து 250 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சி அளித்து இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருடம் டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வார்கள்’ என்றார்.

The post கூடுவாஞ்சேரி அருகே காவல் துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : DGP ,Shailendrababu ,Guduvanchery ,CHENNAI ,Othivakam ,Kuduvancheri ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...