×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறண்டு கிடக்கும் வைகை ஆறு: கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

வருசநாடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி, நீர்வரத்து இல்லாமல் மூல வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. இதனால், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தேனி மாவட்டம், கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், வருஷநாடு, சிங்கராஜபுரம், முறுக்கோடை, தும்மக்குண்டு உள்ளிட்ட 18 ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மூல வைகை ஆற்றில் உறைகிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்றி மூல வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால், உறைகிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால், ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், உறைகிணறுகளை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று சில மாதங்களுக்கு முன்பு, சில இடங்களில் உறை கிணறுகளை தூர்வாரினர். இதனால், குடிநீர் விநியோகம் மேம்பட்டது. இந்நிலையில், தற்போது போதிய கோடை மழை பெய்யாததால், கடமலை மயிலை ஒன்றியத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் குடிநீருக்கு மூல வைகை ஆற்றை நம்பி உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாமல் மூல வைகை வறண்டு கிடக்கிறது.

இதனால், குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியரும், ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். கண்டமனூர் சமூக ஆர்வலர் அங்குச்சாமி கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால் மட்டும் நிரந்தர குடிநீர் பஞ்சம் முழுமையாக நீக்க முடியும். இதற்கு தமிழக அரசும், தேனி மாவட்ட நிர்வாகமும் புதிய தடுப்பணை கட்டுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்றனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறண்டு கிடக்கும் வைகை ஆறு: கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் appeared first on Dinakaran.

Tags : Vaigai ,Vaikai ,
× RELATED வருசநாடு வைகை நகரில் பெண்கள் கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?