×

எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகள் நட உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகள் நட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரக்கன்றுகளை நடுவதிலும் மரங்களை இடம்மாற்றி வைப்பதிலும் குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை நாட பசுமை தாயகம் அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி தெற்கு ரயில்வே வெளிட்ட அறிக்கையில்; “அடுத்த 60 ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் வகையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மறுவடிவமைப்பு செய்யும் பணியை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது.
தெற்கு ரயில்வே சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான அமைப்பாகும். ரயில்வே வளாகத்தில் உள்ள அதிக எண்ணிக்கையிலான மரங்கள் அதற்கு சாட்சியாக உள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 114 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் மற்றும் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. நிலப்பற்றாக்குறை இந்த மறுசீரமைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் தடையாக உள்ளது. ரயில்வே குடியிருப்புகளை இடிப்பது மற்றும் ரயில்வே வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவது போன்ற கடுமையான முடிவை நாங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பாக, மொத்தம் 318 மரங்கள் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டது. இந்த 318 மரங்களுக்கு மாவட்ட பசுமைக் குழுவின் அனுமதியை ரயில்வே நிர்வாகம் பெற்றது. வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சமாக வைத்திருக்க நாங்கள் நேர்மையான முயற்சிகளை எடுத்துள்ளோம்.

பாதிக்கப்படும் 318 மரங்களில், 103 மரங்கள் ரயில்வே வளாகத்தில் உள்ள வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, 33 மரங்களின் கிளைகள் சீர்செய்து அதே இடத்தில் தக்கவைக்கப்படும். மேலும் 182 மரங்கள் மட்டுமே பாதிக்கப்படும்.

தென்னக ரயில்வேயின் வளாகத்தில் மரக்கன்றுகள் நடுவதை தொடர்ந்து செய்து வருகிறோம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 2022-23 ஆம் ஆண்டில், 1.18 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளும், ஏப்ரல் மே 23 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 16743 மரக்கன்றுகளும் தெற்கு ரயில்வேயின் அதிகார வரம்பில் உள்ள பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகள் நட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரக்கன்றுகளை நடுவதிலும் மரங்களை இடம்மாற்றி வைப்பதிலும் குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை நாட பசுமை தாயகம் அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அனுமதியுடன்தான் மரங்கள் வெட்டப்படுகின்றன, நிபந்தனைகள் பின்பற்றப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகள் நட உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Elampur Railway Station ,Chennai ,Ellampur railway station ,
× RELATED குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால்,...