×

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் களம் இறங்க பும்ரா, ஸ்ரேயாஸ் தயார்

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. அதன்படி 16வது சீசன் ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது. ஆசிய கிரிக்கெட் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்த போதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு சென்று விளையாட இந்தியா மறுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில ஆட்டங்களை பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உள்பட இந்தியா சம்பந்தப்பட்ட ஆட்டங்களை வேறு நாட்டிலும் நடத்தலாம் என்று புதிய பரிந்துரையை முன் வைத்தது. முதலில் அவர்களின் யோசனைக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் தற்போது அதன்படியே நடத்தப்பட உள்ளது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 13 ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், எஞ்சிய 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறும். போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. களம் இறங்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளமும், மற்றொரு பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தானும் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்4 சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதனிடையே முதுகு காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த கொண்ட வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, மிடில் ஆர்டர் பேட்டர் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஐபிஎல் மற்றும் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலை தவறவிட்ட நிலையில், ஆசிய கோப்பை தொடரில் களம் இறங்க தயாராகி வருகின்றனர். கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. மார்ச் மாதம் நியூசிலாந்தில் அவருக்கு முதுகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது பும்ரா முக்கியமாக பிசியோதெரபி செய்து வருகிறார்.

விரைவில் அவர் பந்துவீச்சு பயிற்சியை தொடங்க உள்ளார். வெஸ்ட்இண்டீஸ் தொடரில் அவரால் பங்கேற்க முடியாவிட்டாலும் ஆசிய கோப்பையில் களம் இறங்குவார் என கூறப்படுகிறது. இதேபோல் ஸ்ரேயாஸ் அய்யருக்கு மே மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை செய்து, இப்போது பிசியோதெரபி செய்து வருகிறார். ரிஷப்பன்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணாவும் காயத்தில் இருந்து மீண்டு வருகின்றனர். உள்நாட்டில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கு முன் இவர்களும் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் களம் இறங்க பும்ரா, ஸ்ரேயாஸ் தயார் appeared first on Dinakaran.

Tags : Bumrah ,Shreyas ,Asia Cup cricket ,Mumbai ,Asia Cup ,Dinakaran ,
× RELATED பும்ரா அபார பந்துவீச்சு மும்பை அணிக்கு 169 ரன் இலக்கு