×

அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கும் ஆளுநர்; தமிழ்நாடு அமைதி கொள்ளாது: இந்திய கம்யூனிஸ்ட் எச்சரிக்கை

சென்னை: அரசியலைமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கும் ஆளுநரால் தமிழ்நாடு அமைதி கொள்ளாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் எனத் தொடங்கி நடத்தி வரும் சோதனை தாக்குதல் அவரது அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கும் சென்றுள்ளது.

“எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயார்” என அவர் அறிவித்த நிலையிலும் சட்ட முறைகளை நிராகரித்து, மனித உரிமைகளை அலட்சியப்படுத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி உயிருக்கு போராடி வரும் நிலையில் அவரது சட்டபூர்வ கடமைகளை கவனிக்கும் பொறுப்பை அமைச்சரவை உறுப்பினர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரித்து வழங்கியுள்ளார்.

அந்தவகையில், மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் முதல்வரின் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் சட்டப்படியான கடமைப் பொறுப்பாகும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் வன்மத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

தற்போது, தமிழ்நாடு மக்களை தவறாக வழிநடத்தும் உள்நோக்கம் கொண்ட குறிப்புகளுடன் முதல்வர் கடிதத்தை திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநரின் அப்பட்டமான அதிகார அத்துமீறலையும், மலிவான அரசியல் நடவடிக்கையையும் இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அதேபோல, ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆதரவு அரசியலை ஆளுநர் மாளிகையில் இருந்து நடத்துவதை தமிழ்நாடு வினாடிப் பொழுதும் அனுமதிக்காது என்பதை உணர வேண்டும் என எச்சரிக்கை செய்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கும் ஆளுநர்; தமிழ்நாடு அமைதி கொள்ளாது: இந்திய கம்யூனிஸ்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Communists ,Chennai ,Communist ,State Secretary ,Mutharasan ,Tamilnadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...