×

ஆண்டிபட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிட பணிகள் தொடங்கப்படுமா?: ஏரதிமக்காள்பட்டி கிராம மக்கள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஏரதிமக்காள்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிட பணிகளை உடனடியாக தொடங்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரிக்குண்டு ஊராட்சியில் அண்ணாநகர், பழனிதேவன்பட்டி, வீரசின்னம்மாள்புரம், எரதிமக்காள்பட்டி, எம்.சுப்புலாபுரம், இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் ஏரதிமக்காள்பட்டி கிராமத்தில் சுமார் 3,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில், கூலித்தொழி செய்து வருகின்றனர். ஏரதிமக்காள்பட்டி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் பள்ளி படிப்பை மேற்கொள்வதற்கு வசதியாக கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி துவக்கப்பட்டது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் ஏரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்த தற்போது 169 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.‌ இந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் அடுத்து 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படிப்பதற்கு அருகில் உள்ள ஒக்கரைப்பட்டி கிராமத்தில்‌ செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து‌ வருகின்றனர். பக்கத்து கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இருந்தாலும் ஏரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் ஆர்வமுடன் படிக்க வைக்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 3 கட்டிடங்களாக செயல்பட்டு வந்தது. அதில் 2 கட்டிடங்கள் அருகருகே இருந்தது. மற்றொரு கட்டிடம் சிறிது தூரத்தில் இருந்தது. அதில் அருகருகே இருந்த 2 கட்டிடத்தில் ஒரு கட்டிடம் மிகவும் சேதமடைந்து இருந்ததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்ைல. இந்த பள்ளி தற்போது இ-சேவை மைய கட்டிடம் உட்பட 3 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் 1,2 மற்றும் 3ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பழைய கட்டிடத்தில் படித்து வருகின்றனர். 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அந்த கிராமத்தில் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் படித்து வருகின்றனர். 6,7 மற்றும்‌ 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றொரு பள்ளி கட்டிடத்தில் படித்து வருகின்றனர். தற்போது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 3 இடங்களில் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. எனவே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட பழைய பள்ளி கட்டிடத்தை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு விரைவாக புதிய கட்டிடம் கட்டி முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார். இதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியத்திலும் ரூ.பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய அரசு பள்ளி கட்டிட பணிகள், புதிய வகுப்பறை கட்டும் பணிகள், பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இப்பள்ளியில் விரைவாக புதிய கட்டிடம் கட்டி முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

* ஒரு பள்ளி 3 இடங்களில் செயல்படுகிறது

அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என்ற ஒரு பள்ளி தற்போது 3 இடங்களில் செயல்பட்டு வருவதால், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் அலைச்சலை ஏற்படுத்துகிறது. தற்போது இ-சேவை மைய கட்டிடத்தில் படிக்கும் மாணவர்கள் கழிப்பிடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சிறிது தூரம் நடந்து சென்று வர வேண்டிய நிலை உள்ளது. பள்ளியில் மதியம் சத்துணவு வாங்க வேண்டும் என்றாலும் பழைய பள்ளி கட்டிடத்திற்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு தினந்தோறும் அதிக அலைச்சல் ஏற்படுகிறது. எனவே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட பழைய பள்ளி கட்டிடத்தை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு விரைவாக புதிய கட்டிடம் கட்டி முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றனர்.

The post ஆண்டிபட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிட பணிகள் தொடங்கப்படுமா?: ஏரதிமக்காள்பட்டி கிராம மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Padrakshi Union Middle School ,Andipati ,Erithimakkalpatti ,ANTIPATTI ,Eradimakkapatti ,Andipatti ,Pavadrakrupatti Union Middle School ,Antipati ,Erithimakalapatti ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே சுடுகாடு இடத்தில்...