×

முதலமைச்சருக்கு பதில் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி அமலாக்கத்துறை அதிகாரி போல பேசி வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு..!!

சென்னை: முதலமைச்சருக்கு பதில் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி அமலாக்கத்துறை அதிகாரி போல பேசி வருகிறார் என்று ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

அமலாக்கத்துறை அதிகாரி போல பேசி வருகிறார் எடப்பாடி:

முதலமைச்சருக்கு பதில் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி அமலாக்கத்துறை அதிகாரி போல பேசியுள்ளார். அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பதிலடி:

முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசுவதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. சோதனையை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை; ஆனால் மனிதநேயத்துடன் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை:

சோதனை குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். டெல்லி சென்று கனிமொழியை மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது பச்சைப் பொய் என்றும் அவர் தெரிவித்தார்.

அறியாமையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி:

இருதய நோய் எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மாரடைப்பு எப்படி வரும் என்பது கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி அறியாமையில் இருக்கிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு எம்.பி. பதவியை அதிமுகவிடம் இருந்து மிரட்டி பாஜக வாங்கிக் கொடுத்தது. வேலுமணி, தங்கமணி வீடுகளில் ரெய்டு நடந்தபோது டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தது ஏன்? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக சொல்கிறபடி எல்லாம் கேட்டு வழக்குகளில் இருந்து தப்பித்து வருபவர்தான் எடப்பாடி பழனிசாமி. நான் சொல்வது தவறாக இருந்தால் எடப்பாடி பழனிசாமி என் மீது வழக்கு தொடரட்டும் என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு இதயமே இல்லை: ஆர்.எஸ்.பாரதி

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதை கொச்சைப்படுத்தி பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு இதயமே இல்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்ததில் என்ன தவறு? கட்சித் தொண்டருக்கு ஏதேனும் ஒன்று என்றால் பதறிப்போய் பார்க்கும் கட்சிதான் திமுக; அதில் என்ன தவறு இருக்கிறது? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார்.

ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்டவர்கள்தான் அதிமுகவினர்:

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்டவர்கள்தான் அதிமுகவினர் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு வரலாறும் தெரியாது, சட்டமும் தெரியாது என்று ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். ரூ.4,000 கோடி ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ வேண்டாம்; மாநில காவல்துறையே விசாரிக்கட்டும் என முதலமைச்சராக இருந்தபோது பழனிசாமி நீதிமன்றத்தில் முறையிட்டார். அதிமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகள் அத்தனையிலும் குற்றத்தை நிரூபித்து காட்டியிருக்கிறது திமுக. 2016-ல் ரூ.570 கோடியுடன் கன்டெய்னர் லாரி பிடிபட்ட வழக்கை இன்னும் சிபிஐ விசாரிக்கவே இல்லை. பழனிசாமி மீதான வழக்கிலும், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி வழக்குகளிலும் இதுதான் நடக்கப்போகிறது என்று கூறினார்.

பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்: ஆர்.எஸ்.பாரதி

அவதூறு பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிடில் வழக்கு தொடரப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற படிக்கட்டு ஏற தயாராகிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பொய் சொல்கிறார் எடப்பாடி:

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு புகாரில் தான். செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும், பழைய வழக்குகளை திமுக வாபஸ் பெறவில்லை. திகார் சிறைக்கு சென்று கனிமொழியை ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பார்த்தனர். இதை எல்லாம் மறைத்து எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

ஈபிஎஸ் புகாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்:

பதவிக்காக ஒரு பேச்சும்… பதவிக்கு வந்த பின் வேறு பேச்சு பேசுவது நாங்கள் அல்ல. பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்தார்.

தவறான தகவலை பரப்புகிறார் எடப்பாடி:

பிடிஆர் ஆடியோ தொடர்பாக தவறான தகவலை ஈபிஎஸ் பரப்புகிறார். 15 மாதத்தில் மருத்துவமனை திறந்த எங்கள் முதல்வரை போல ஈபிஎஸ் செய்த சாதனை ஒன்றுமில்லை. செந்தில்பாலாஜி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தான் அவர் குற்றவாளி என்று கூறினார்.

இலாகா மாற்றம் குறித்து ஆளுநருக்கு முறையாக தெரிவிக்கப்பட்டது:

இலாகா மாற்றம் தொடர்பான பரிந்துரை ஆளுநருக்கு முறையாக தெரிவிக்கப்பட்டது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்தும் ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

The post முதலமைச்சருக்கு பதில் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி அமலாக்கத்துறை அதிகாரி போல பேசி வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chief Minister ,RS ,Bharati ,Chennai ,Minister ,Bharti ,Dinakaran ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...