×

ஆண்டிபட்டி பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று ‘படு ஸ்பீடு’: நீர்மட்டம் குறைவால் விவசாயம் பாதிப்பு

* சாலைகளில் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல், சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று பரவலாக வீசி வருகிறது. ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான க.விலக்கு, கண்டமனூர், ஜி.உசிலம்பட்டி, கணவாய் மலைப்பகுதி, திம்மரசநாயக்கனூர், பாலக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி‌ வருகிறது. பலத்த காற்றால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்‌. ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு டூவீலரில் செல்பவர்கள் பலத்த காற்று காரணமாக சிரமம் அடைந்து வருகின்றனர். பலத்த காற்றால் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். ஆண்டிபட்டி நகர் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் நகர் பகுதி முழுவதும் தூசி பரவி காணப்ப‌டுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் கண்களில் தூசி விழுந்து பாதிக்கப்படுகின்றனர். இதனால் பகல் நேரங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பலத்த காற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டிபட்டி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வாழை, முருங்கை போன்றவை சாகுபடி செய்துள்ளனர்‌. கிராமப்புற பகுதிகளில் இந்த பலத்த காற்றால்‌ வாழை, முருங்கை போன்றவைகள் அடிக்கடி சாய்ந்து பாதிக்கப்படுகின்றது. ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வறட்சியான பகுதியாக காணப்பட்டது. பின்னர், அடிக்கடி கோடை மழை பெய்து வறட்சியைப் போக்கும் விதமாக விவசாய நிலங்களில் செடி கொடிகளில் பசுமை படர்ந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றின் சீசன் தொடங்கி காற்று பலமாக வீசி வருவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தால் விவசாய நிலத்தில் ஈரப்பதங்கள் குறைவதுடன் கிணறுகளில் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. கிணறுகளில் நீர் இருப்பு குறைவதால் விவசாயிகள் விவசாய பாசன நிலத்தை சுருக்கி வருகின்றனர்.

வேகமாக காற்று வீசுவதால், தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மாவட்டத்தில் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் ஒருநாள் சராசரி மின்உற்பத்தி 20 ஆயிரம் யூனிட்டாக இருந்தது. குறிப்பாக ஆண்டிபட்டி பகுதியில் காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்படுவதால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது. தேனி மாவட்டத்தில் வீசும் காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், காற்றாலை மின்சார உற்பத்தி விரைவில் உச்சக்கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிகமாக காற்று வீசும் பட்சத்தில் ஒரு காற்றாலையில் அதிகபட்சமாக அதன் உற்பத்தி திறனை பொறுத்து ஒரு நாளைக்கு 38 ஆயிரம் யூனிட் வரையில் மின்சார உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுதால் கோடை வெயிலின் தாக்கம் அடியோடு குறைந்துவிட்டது

The post ஆண்டிபட்டி பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று ‘படு ஸ்பீடு’: நீர்மட்டம் குறைவால் விவசாயம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Southwest Monsoon ,Antipatti Region ,Antipatti ,south- ,Andipatti ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?