×

புடவைகளில் மின்னும் புள்ளிக் கோலங்கள்!

‘சமூக வலைத்தளங்கள், குறிப்பா இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் எல்லாம் பெருகிடுச்சு, இதற்கிடையிலே நாமளும் ஜெயிக்கணும்ன்னா தனித்துவமா எதாவது செய்யணும்ன்னு தோணுச்சு. அங்கே உருவானதுதான் இந்த கோலம் சேலைகள்’… தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் நிதி. புள்ளி வைத்த சிக்குக் கோலங்களால் நிதியின் புடவைகள் இன்ஸ்டாகிராம் டிரெண்டிங்கில் உள்ளன. காட்டன், ஹேண்ட்லூம், சில்க் காட்டன் என பளிச் நிறத்தில் மாக்கோல டிசைன்களில் புள்ளிக்கோலங்களால் கைகளால் வரையப்பட்ட இந்தப் புடவைகளுக்கு பெண்கள் ஹார்டின் விடுகிறார்கள். எங்கே தோன்றியது இந்த ஐடியா? … கேட்டவுடன் உற்சாகமானார் நிதி. ‘சொந்த ஊர் சிதம்பரம், இப்போ பெங்களூருவில் இருக்கேன். விஸ்காம் படிச்சிருக்கேன். அப்பா கணேஷ் பாபு நகை கடையிலே மேனேஜர், அம்மா பரிமளா, ஹவுஸ் ஒயிஃப், மேலும் பார்ட் டைமாகவும் எம்.எல்.எம் ஒர்க் செய்யறாங்க. ஒன்றரை வருஷம் கிராபிக் டிசைனரா வேலை செய்திட்டு இருந்தேன். திருமணத்துக்குப் பிறகு என்னுடைய நேரம் செட் ஆகாம அடுத்த வேலைக்காகக் காத்திருந்தேன். என் கணவர் சண்முகம், ஐடியிலே வேலை செய்கிறார். அடுத்த வேலைக்காகக் காத்திருந்த அந்த ஒரு வருஷம் எனக்குச் சும்மா இருக்கப் பிடிக்கலை. பொதுவாகவே எனக்கு புடவைகள்ன்னா ரொம்ப இஷ்டம். பார்த்து பார்த்து வாங்குவேன். ஏன் நாம புடவை பிஸினஸ் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. 2018ல் ‘இழையாள் தி சாரீஸ் ஹவுஸ்’ என்கிற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் உருவாக்கி, ஆன்லைனில் புடவைகள் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். பெரும்பாலும் கைத்தறி, காட்டன், புடவைகள்தான் எனக்கு அடிப்படை’ என்னும் நிதி தனது பிரத்யேக கோலம் புடவைகள் குறித்துப் பேசத் துவங்கினார்.

‘என்னதான் அபார்ட்மென்ட் வாழ்க்கையானாலும் சின்னதாகவேணும் நிறைய வீடுகள்ல கோலங்களைப் பார்க்க முடியுது. குறிப்பா விழாக் காலங்கள்ல பெயிண்ட் கொண்டு கோலம் போடுகிற பழக்கம் இன்னைக்கும் இருக்கு. போலவே ரெஸ்டாரென்ட்கள், ஹோட்டல்கள், திருமண வாழ்த்து அட்டைகள் துவங்கி கொடுக்கற தாம்புழப் பைகள் வரையிலும் கூட கோலம் டிசைன்கள் இன்னைக்கும் நம்ம வழக்கத்தில் இருக்கு. ஏன் இந்தக் கோலங்கள் புடவைகள்ல போடக் கூடாதுன்னு தோணுச்சு. அப்போதான் இந்த கோலங்கள் கான்செப்ட் எப்படிப் புடவைகள்ல கொண்டு வரலாம்ன்னு தேடலில் இறங்கினேன்.அந்தத் தேடல் மூலமா ஹேண்ட் பிளாக் பிரின்ட் கான்செப்ட் எனக்கு அறிமுகமாச்சு. புடவையிலே எப்படிக் கொண்டு வரலாம்ன்னு யோசிச்சு ஆரம்பத்திலே கருப்பு நிற புடவை அதிலே வெள்ளை நிற கோலங்கள் அப்படின்னுதான் திட்டமிட்டேன். நிறைய கேட்க ஆரம்பிச்சாங்க. அறிமுகப்படுத்தி ஒண்ணு ரெண்டு நாட்கள்ல நிறைய ஆர்டர்கள் வரத் துவங்கிடுச்சு. ஆனாலும் இன்னமும் சிறப்பா இந்த புடவைகளை அறிமுகப்படுத்த நினைச்சேன்’ என்னும் நிதி இதற்கு தீபிகா வேல்முருகனுடன் கைகோர்த்திருக்கிறார்.

‘இதே கோலம் கான்செப்ட் அடிப்படையாக் கொண்டு ‘ஹோம்2செரிஷ்’ இன்ஸ்டா பக்கம் மூலமா தீபிகா வேல்முருகன் கோலங்கள் டிசைன் போடப்பட்ட பூஜை பாக்ஸ், கொலுப் படிகள், மரப் பெட்டிகள், பலகை, எல்லாம் விற்பனை செய்திட்டு இருக்காங்க. அவங்க கிட்டேயே இந்த புடவைகளை அறிமுகப்படுத்தித் தர முடியுமான்னு கேட்டேன். அவங்களை விட வேறு யார் இதற்கு சரியான நபர்?. அவங்க அறிமுகப்படுத்தவும் விற்பனை இன்னும் சூடு பிடிக்க ஆரம்பிச்சது’ உற்சாகமாக பேசும் நிதி தனது புடவைகளின் அடுத்த டார்கெட் என்ன? எனப் பகிர்ந்தார்.‘ஆரம்பத்தில் ஒரே கருப்பு நிறம் , அதில் வெள்ளை நிற புள்ளிக் கோலங்கள் இப்படித்தான் திட்டமிட்டேன். நிறைய கஸ்டமர்கள் வேறு வேறு வண்ணங்கள்ல கேட்க ஆரம்பிச்சாங்க. சிலருடைய வீடுகளில் கருப்பு நிற உடைகள் உடுத்த மாட்டாங்க, சிலர் விழாக்காலங்களில் மட்டும் கருப்பு தேர்வு செய்ய மாட்டாங்க. புடவைன்னாலே இப்போதைய பெண்களுக்கு விழாக்கால உடைதானே. அதனாலேயே கருப்பு மட்டும் இல்லாம இப்போ ஐந்து பேசிக் கலர்களிலும் இந்த புடவைகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கேன். ஹேண்ட்லூம், காட்டன் புடவைகள்தான் நேரடி நூல் கொண்டு நெய்யற காரணம் அதனுடைய நிறங்கள் பளிச்ன்னு கிடைக்கும். மேலும் காட்டன் புடவைகள், நூல் புடவைகள் புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் கூட பிரைட் லுக் கொடுக்கும். அடுத்ததா சில்க் காட்டன் புடவைகள்ல இந்தக் கோலம் டிசைன்கள் போட்டு தயார் செய்திட்டு இருக்கோம்’ என்னும் நிதி தன் புடவைகளின் தனித்துவம் குறித்து மேலும் தொடர்ந்தார்.

‘ பொதுவாகவே இந்தப் புள்ளிக் கோலங்கள் கான்செப்ட்டை டிஜிட்டல் பிரின்டிங்கில் கூட செய்யலாம். ஆனால் இந்தப் புடவைகள் முழுக்க முழுக்க ஹேண்ட்பிளாக் பிரின்ட் கொண்டு உருவாக்கினது. பார்த்தாலே அந்த டை, ஹேண்ட்மேட் என்கிறதே தெரியும். அதாவது ஒவ்வொரு புடவையும், ஏதோ ஒரு கோலமா இல்லாம எந்த நிறத்துக்கு என்ன புள்ளிக்கோலம், இப்படிப் பார்த்து பார்த்துதான் டிசைன் செய்யறோம். ரூ.2000 துவங்கி இந்தப் புடவைகள் விற்பனை செய்யறேன்’. என்னும் நிதி தற்போது முழுமையாகவே இந்த புடவை பிஸினஸில் பிஸியாகிவிட்டார். நேரடியான நெசவாளர்கள் சந்திப்பு, கொள்முதல், பவர்லூம் என பல ஊர்களுக்கும் பயணம் செய்து புடவைகளைபிரத்யேகமாக தேர்வு செய்து விற்பனைக்குக் கொண்டுவருகிறாராம்.
– ஷாலினி நியூட்டன்

The post புடவைகளில் மின்னும் புள்ளிக் கோலங்கள்! appeared first on Dinakaran.

Tags : Instagram ,Jayikanumna ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராம் நண்பர் யார்? குழந்தையை...