×

ஆனைக்குட்டம் கிராமத்தில் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்: மக்கள் திறந்தவெளியில் ஒதுங்குவதால் சுகாதாரக்கேடு அபாயம்

சிவகாசி: சிவகாசி அருகே ஆனைக்குட்டம் கிராமத்தில் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒன்றிய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்கின்றன. சுகாதார வளாகங்கள், தனிநபர் கழிப்பிடங்கள் என ஒவ்வொரு திட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து சுகாதாரத்தை காக்க அரசு முயற்சி செய்து வருகின்றது. அரசின் வளர்ச்சி நிதியில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் கிராமங்களில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள் பூட்டிக்கிடக்கின்றன. சில கிராமங்களில் சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் கூட போதிய விழிப்புணர்வு இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடத்தை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆனைக்குட்டம் கிராமத்தில் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தும் அவலநிலை தொடர்கின்றது.

இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப கிராமத்தில் போதிய சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை. கிராமத்தில் சுகாதாரம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதததால் கிராம மக்கள் கண்மாய், முள்வேலி செடிகளை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் வடக்கு தெரு மற்றும் இந்திராநகரில் பெண்களுக்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் செயல்படாமல் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது. இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் சுகாதார வளாகங்கள் பூட்டியே கிடக்கின்றன. மகளிர் சுகாதார வளாகம் பூட்டியே இருப்பதால், குப்பை கொட்டும் இடமாக மாறி, புதர் மண்டி வீணாகி வருகின்றது. இந்த கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதிகள் கிடையாது. தனி நபர் கழிப்பிட திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் சேதமடைந்தும் குப்பைகள் பழைய துணிகள் அடைத்தும் வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் வசதிகள் செய்து சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஊராட்சி செயலாளர் முத்துப்பாண்டி கூறுகையில், வடக்கு தெருவில் உள்ள சுகாதார வளாகம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் நடைபெற உள்ளது. இந்திரா நகர் சுகாதார வளாகம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

The post ஆனைக்குட்டம் கிராமத்தில் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்: மக்கள் திறந்தவெளியில் ஒதுங்குவதால் சுகாதாரக்கேடு அபாயம் appeared first on Dinakaran.

Tags : Anikkutam ,Shivakasi ,Anakkutam ,Sivakasi ,Manikutam ,Dinakaran ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...