×

நீண்ட கால பிரச்னைக்கு கிடைத்துள்ளது தீர்வு திருமங்கலம் – கொல்லம் இடையே நான்கு வழிச்சாலை: தீவிரமாக நடைபெறும் பணிகள்

* பயணிகள், டிரைவர்கள் உற்சாகம்

திருமங்கலம்: திருமங்கலத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை. நீண்ட காலமாக குறுகியதாக இருந்தது.இதனால் வாகன போக்குவரத்து மிகவும் கடினமானதாகஅமைந்திருந்தது. இந்நிலையில் இதனை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் வழியாக ஏற்கனவே பெங்களூரு – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து ராஜபாளையம், தென்காசி வழியாக கேரள மாநிலம் கொல்லம் வரையில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. திருமங்கலத்திலிருந்து கொல்லம் வரையிலான 235 கி.மீ தூரமுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலை தமிழக மற்றும் கேரள மாநிலத்தினை இணைக்கும் முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது. மேலும் சபரிமலை அய்யப்பன் கோயில், பிரபல சுற்றுலா தலமான குற்றாலம் செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை இருந்து வருகிறது. இதனால் இச்சாலையில் வாகன போக்குவரத்து மிக அதிகமாக இருக்கிறது.

இதற்கிடையே இரு வழிச்சாலையாக மிகவும் குறுகியதாக இச்சாலை அமைந்திருக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்களை காண முடியாத வகையில் குறுகிய வளைவுகளும் அதிகம் உள்ளன. இச்சாலை ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை மதுரையுடன் இணைக்கும் முக்கிய சாலையாகும். மேலும் மதுரையில் இருந்து அதிக அளவில் அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் இச்சாலை வழியாக கேரளாவிற்கு அதிகம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இச்சாலையில் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இதையடுத்து இதனை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம் செய்ய வேண்டும் என்று பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு இச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்த சாலை இருவழிச்சாலையாகவே இருந்து வருகிறது. பல இடங்களில் மிகவும் குறுகலாகவும், ஆபத்தான வளைவுகளையும் கொண்டதாக திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. இந்தநிலையில் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

கேரள மாநிலம் மற்றும் தென்காசி, விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நான்குவழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் நகரில் துவங்கி மாவட்ட எல்லையான கோபால்சாமி மலை வரையில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற துவங்கியுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. நான்குவழிச்சாலை பணிக்காக திருமங்கலம் – கொல்லம் ரோட்டில் உள்ள ஏராளமான நிழல்தரும் மரங்கள் இருபுறத்திம் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. திருமங்கலத்திலிருந்து ஆலம்பட்டி, டி.புதுப்பட்டி, டி.குன்னத்தூர், டி.கல்லுப்பட்டி, சுப்புலாபுரம் என பல ஊர்களை கடந்து இந்த நான்கு வழிச்சாலை செல்கிறது. இதில் ஆலம்பட்டியை தவிர்த்து மற்ற கிராமங்களில் புறவழிச்சாலையாகவே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இருவழிச்சாலையாக இருந்தபோது பல இடங்களில் அபாயகரமான வளைவுகள் இருந்தன. நான்கு வழிச்சாலையாக மாறும் போது இந்த வளைவுகள் அகற்றப்பட்டு சாலை நேராக அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில் குறுக்கிடும் ஓடை, கண்மாய்களில் பாலங்கள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

திருமங்கலம் – கொல்லம் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுவிட்டால் ராஜபாளையம், தென்காசி, குற்றாலம், சபரிமலை, கொல்லம் செல்லும் வாகனங்களுக்கு பயண நேரம் வெகுவாக குறைவதுடன், எரிபொருள் செலவும் மிச்சமாகும் என்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நான்கு வழிச்சாலையை வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் இந்த சாலையில் அதிகளவில் டோல்கேட் அமைத்து சுங்ககட்டணம் வசூலிக்ககூடாது என்பதும் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

* வெட்டி அகற்றப்பட்ட மரங்கள்…

திருமங்கலம் – கொல்லம் இடையிலான நான்கு வழிச்சாலைக்காக ஏற்கனவே நெடுஞ்சாலையோரங்களில் இருந்த ஏராளமான வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருமங்கலத்திலிருந்து டி.கல்லுப்பட்டி வரையில் இந்த சாலையில் ஏராளமான புளியமரங்கள் இருந்து வந்தன. கடந்த 30. 40 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த மரங்களால் இந்த சாலை பசுமை சாலையாகவே காட்சியளித்து வந்தது. வாகனோட்டிகளுக்கு அதிகளவில் நிழல் கொடுத்ததுடன், இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் ஏலம் எடுத்து புளியம்பழங்களை இம்மரங்களில் இருந்து பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது இம்மரங்கள் அனைத்தும் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக வெட்டப்பட்டுள்ளது. இதனால் பசுமை நிழல் சாலையாக இருந்த திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை தற்போது மரங்கள் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கிறது. இது பொதுமக்களுக்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது. எனவே, நான்கு வழிச்சாலையாக மாறியபின்பு, அதன் ஓரங்களில் அதிக அளவில் மரங்களை வளர்க்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post நீண்ட கால பிரச்னைக்கு கிடைத்துள்ளது தீர்வு திருமங்கலம் – கொல்லம் இடையே நான்கு வழிச்சாலை: தீவிரமாக நடைபெறும் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Kollam ,Trimangalam ,Kerala State Kollam ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...