×

டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு..!!

தஞ்சை: டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து அமைச்சர் கே.என்.நேரு தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் வழியாக 1,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.

தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கரூர், திருச்சி வழியாக இரவு கல்லணையை தண்ணீர் வந்தடைந்த நிலையில், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக கல்லணையில் இருந்து இன்று காலை காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பையொட்டி காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பாலங்கள் புதிதாக வண்ணங்கள் பூசப்பட்டு பொலிவுடன் காட்சியளிக்கிறது. பாலத்தில் உள்ள கரிகாலன், ராஜராஜசோழன், அகத்தியர், பொறியாளர், விவசாயி, மீன்பிடிக்கும் பெண், காவேரி அம்மன் ஆகிய சிலைகளுக்கும் வண்ணம் பூசப்பட்டுள்ளது. கல்லணையில் தண்ணீர் திறப்பதன் வாயிலாக 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதிபெறும். இதுதவிர சம்பா, தாளடியும் சேர்த்தால் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

 

The post டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,K.N. Nehru ,Kallanai ,Thanjavur ,KN Nehru ,Cauvery ,Vennar ,
× RELATED 4,500 பேருக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி...