×

மாதவரம் மண்டலத்தில் ₹3 கோடியில் திட்ட பணிகள்: கூட்டத்தில் தீர்மானம்

திருவெற்றியூர்: மாதவரம் மண்டலக்குழு கூட்டத்தில் ₹3 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலக்குழு கூட்டம், மண்டலக்குழு தலைவர் நந்தகோபால் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நலப்பணிகள் குறித்த தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடத்தினர். அப்போது 27வது வார்டு கவுன்சிலர் சந்திரன் பேசும்போது, எனது வார்டில் இருள் சூழ்ந்த தெருக்களில் புதிதாக 250 தெருவிளக்குகள் அமைக்க வேண்டும், என்றார்.

தொடர்ந்து 29வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் திருநாவுக்கரசு கூறும்போது, பொன்னியம்மன்மேடு பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித் தர வேண்டும், மாதவரம் கனகசத்திரம் ஜி.என்.டி சாலையில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் விபத்துகளை தடுக்க அங்கு சிக்னல் அமைக்க வேண்டும், என்றார். இதையடுத்து கவுன்சிலர்கள் குடிநீர், சாலை வசதி, குப்பையை அகற்றுதல் உள்ளிட்டவை தொடர்பாக மண்டல குழு தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு, தலைவர் நந்தகோபால் பதில் அளித்து பேசுகையில், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக அனைத்து குறைபாடுகளும் சரி செய்யப்படும் என்றார். அதனைத் தொடர்ந்து, மாதவரம் மணடலத்தில் ₹3 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மாதவரம் மண்டலத்தில் ₹3 கோடியில் திட்ட பணிகள்: கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Tiruvettiyur ,Madhavaram Zonal Committee ,Chennai Municipal Corporation ,Madhavaram Zone ,Dinakaran ,
× RELATED மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த...