×

மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது: செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் கருத்து..!

சென்னை: மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செயலலிதா முதல்வராக இருந்த போது போக்குவரத்து ஊழியர் நியமனத்தில் முறைகேடு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் அமலாக்கத்துறை மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை மனு நகல் உங்களுக்கு அனுப்பப்பட்டதா என செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி; அமலாக்கத்துறை மனு நகல் இன்னும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை மனுவை செந்தில் பாலாஜியிடம் அளித்து கையொப்பம் பெற நீதிமன்ற பணியாளருக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். கைது அன்று நடந்த சம்பவம் தொடர்பாக நீதிபதியிடம் செந்தில் பாலாஜி சுருக்கமாக விளக்கம் அளித்தார்.

அப்போது; ஒன்றிய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டுக்கு வந்த போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்; அடுத்த நாளே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகளை செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்கக் கூடாது. 13ம் தேதி காலை 7 மணி முதல் 14ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என விசாரணை அமைப்புகள் ஏவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே செந்தில் பாலாஜியிடம் போதிய அளவு விசாரணையி நடத்தப்பட்டுள்ளதால் மீண்டும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்க கூடாது. மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடினார். வழக்கு பதிவு செய்த விவரங்களையும், விசாரணைகள் குறித்த விவரங்களையும் அமலாக்கத்துறை வழங்கியது. புகார்தாரரான அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரியிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.

எதற்காக காவல் தேவை என அமலாக்கத்துறையினரிடம் வாக்குமூலம் பெற்றார். விசாரணையை தொடர்வதில் இருந்து நாங்கள் தடுக்கபப்டுவதாக அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கில் தொடபுடைய தொகை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். சோதனையின் போது எங்களுக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு வழங்கவில்லை. நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால் செந்தில்பாலாஜியிடம் விசாரணை செய்ய முடியாது என வாதிட்டது. மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.  அமலாக்கத்துறையின் காவலுக்கு செல்ல விருப்பம் உள்ளதா? என செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார்.

அமலாக்கத்துறை காவலில் செல்ல தனக்கு விருப்பம் இல்லை என வீடியோ கான்பரன்ஸ் மூலம் செந்தில் பாலாஜி பதிலளித்தார். இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி; ஆட்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் நகல் கிடைத்ததும், தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார். ஜாமின் கோரிய வழக்கிலும் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது: செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் கருத்து..! appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai ,Igord ,Enforcement Department ,Minister ,Ikort ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...