×

வேளச்சேரி முதல் மடிப்பாக்கம் வரை உள்ள மழைநீர் வடிகால் பணியை சீக்கிரம் முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம் ராம்நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இதற்கிடையே மழைக் காலங்களில் வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பது வாடிக்கையாக உள்ளது.

அதிலும் மடிப்பாக்கம் ராம்நகர், சதாசிவம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதிகள் இல்லாமல் இருந்ததால் சிறிய மழைக்கே தெருக்களில் கழிவுநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கும். சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடுவதுடன், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். அதிலும் பருவமழை காலங்களில் ராம்நகர் மக்களின் நிலை திண்டாட்டம்தான். எனவே, மழைநீர் வடிகால் வசதியை அமைத்து தர வேண்டுமென நீண்டகாலமாக அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதையேற்று மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் தென்சென்னை பகுதியில் விரிவாக்கப்பட்ட ராம்நகர், மடிப்பாக்கம், குபேர நகர், ராஜேஷ் நகர், காரப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் ரூ.1,714 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி 2021-ம் ஆண்டு டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த திட்டத்துக்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு பணிகள் கடந்தாண்டு தொடங்கப்பட்டது.

அந்தவகையில் ராம்நகர், சதாசிவம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே திட்டப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் அந்தப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், தோண்டிய பள்ளங்களை சுற்றி முழுமையான தடுப்புகளும் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் மடிப்பாக்கம்- வேளச்சேரி பிரதான சாலையில் ஏற்கெனவே நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பல்வேறு பகுதிகளாக பிரித்து செய்துவருகிறோம். எனவே, திட்டப் பணிகளில் எவ்வித சுணக்கமும் இல்லை. மழை, தொலைத்தொடர்பு இணைப்பு, மின் இணைப்பு கேபிள்கள் இடையூறு உள்ளிட்டவற்றால் மட்டுமே பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மற்றபடி தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்படும் பள்ளங்களை சுற்றி முழுமையாக தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ஏதேனும் இடத்தில் இல்லாமல் இருப்பதை மக்கள் தெரிவித்தால் உடனடியாக தடுப்புகள் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

The post வேளச்சேரி முதல் மடிப்பாக்கம் வரை உள்ள மழைநீர் வடிகால் பணியை சீக்கிரம் முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Velachery ,Madipakkam ,Chennai ,Madipakkam Ramnagar ,Perungudi Mandal ,Chennai Corporation ,
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...