×

பூசணியில் சில புட் வெரைட்டி

பூரியை கோதுமை மாவிலும், தயிர் சாதத்தை அரிசியிலும்தான் நாம் செய்து சாப்பிடுகிறோம். இதைக் கொஞ்சம் மாற்றி மருத்துவக் குணங்கள் நிரம்பிய மஞ்சள் பூசணியில் பூரியையும், வெண்பூசணியில் தயிர் சாதத்தையும் செய்து, டிப்ரன்ட் டிஷ்சாக சாப்பிட்டு பார்க்கலாமே!

மஞ்சள் பூசணி பூரி

தேவையானவை

மஞ்சள் பூசணி – கால் கிலோ (துருவியது)
கோதுமை மாவு – அரை கப்
வெல்லம் – அரை கப்
ஏலக்காய் – 3 (பொடியாக்கியது)
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

மஞ்சள் பூசணி மற்றும் வெல்லத்தை துருவி வைத்துக்கொள்ளவும். வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். வெல்லம் கொதித்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி அதில் துருவிய பூசணியைப் போட்டு வேக வைக்கவும். பூசணி நன்றாக வெந்ததும் அதனுடன் கோதுமை மாவு, உப்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும். இவற்றை ஒன்றாக கலந்து பூரிக்கு பிசைவது போல் பிசைந்து கால் மணி நேரம் மூடி வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மாவை பூரிகளாக தேய்த்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரிகளை பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான மஞ்சள் பூசணி பூரி தயார்!

வெள்ளைப் பூசணி தயிர்சாதம்

தேவையானவை

வெள்ளைப்பூசணி – 2 பத்தைகள்
மாதுளை முத்துகள் – ஒரு கைப்பிடி அளவு
கறுப்புத் திராட்சை – 10
பொடிசாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய மாங்காய் – 2 பத்தை
விதை நீக்கிய வெள்ளரித்துண்டு – கொஞ்சம்
பொடிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 3
கெட்டித்தயிர் – 200 மிலி
எலுமிச்சை – அரை மூடி
கெட்டி மோர் – 100 மிலி
தண்ணீர் – கால் லிட்டர்
கொத்தமல்லித்தழைகள் – கொஞ்சம்
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

வெள்ளைப்பூசணியை தோல் சீவி, விதைகள் நீக்கி, காரட் துருவியில் பாசுமதி அரிசி சைசில் துருவிக்கொள்ளவும். பின்பு துருவிய துருவலை ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போடவும். அதை 10 நிமிடம் தனியாக ஊற வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து அதில் மோரை ஊற்றி மாதுளை, திராட்சை, மாங்காய், வெள்ளரி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு கலக்கி வைக்கவும். 10 நிமிடம் கழித்து ஊற வைத்த பூசணியை நீரில்லாமல் ஒட்டப் பிழிந்து எடுக்கவும்.நன்றாகப் பிழிந்த பூசணியில் மோர், பழக்கலவையையும் தேவையான அளவு தயிரும் உப்பும் விட்டுக் கிளறவும். நன்கு கிளறியதும் கொத்தமல்லித் தழைகளை தூவவும். இப்போது சுவையான, ஆரோக்கியமான வெண்பூசணி தயிர் சாதம் தயாராகிவிடும். வெண்பூசணி தயிர் சாதத்தை ஃபிரிட்ஜில் வைத்து கூழாகவும் பரிமாறலாம். கார மாங்காய், வத்தல், மோர் மிளகாய், ஊறுகாய் என எல்லா காம்பினேஷன்களும் இதற்கு பொருந்தும். அதிலும் பழைய வத்தக்குழம்பு அசத்தல் டேஸ்ட் கொடுக்கும். இது அடுப்பில்லாத ஈசி சமையல் என்பதுதான் ஹைலைட்.

நவதானிய பணியாரம்

தேவையானவை

சிவப்பரிசி, புழுங்கல் அரிசி – தலா 1/2 கப்
உளுந்து, ஊற வைத்த ஜவ்வரிசி – தலா 1/4 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
சோயா, கொண்டைக்கடலை – தலா 1/4 கப்
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா 3 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 10
பொடித்த மிளகு, சீரகம் – தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
உப்பு, நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை

கொண்டைக்கடலை, சோயா இரண்டையும் 8 மணி நேரம் ஊறவைக்கவும். சிவப்பரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம், பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து நைசான பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து அரைமணி நேரம் புளிக்க விடவும். பின்பு உப்பு போட்டு குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி வெந்ததும் எடுத்து மிளகாய், பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.

The post பூசணியில் சில புட் வெரைட்டி appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…