×

கொடுங்கையூர், புதுவண்ணையில் கஞ்சா விற்ற திருநங்கை உள்பட 3 பேர் சிக்கினர்

பெரம்பூர்: கொடுங்கையூர், புதுவண்ணையில் கஞ்சா விற்ற திருநங்கை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 45 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொடுங்கையூர் பகுதியில் இரவு நேரங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மதியம் கொடுங்கையூர் – எருக்கஞ்சேரி எத்திராஜ் சாலை சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி பைக்கில் வந்த திருநங்கை ஒருவரை மடக்கி சோதனை செய்தனர். அவரிடம் 45 சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பொட்டலங்களை பறிமுதல் செய்து, ஷீபாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், அவர் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி காந்தி நகரைச் சேர்ந்த திருநங்கையான ஷீபா (19) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணையில், கஞ்சாவை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கைலாசம் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற ஹரி (22) என்பவரிடம் இருந்து வாங்கியதாக ஷீபா தெரிவித்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை ஹரிஹரனையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் பொது இடத்தில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார், கஞ்சா போதையில் கத்தியை வைத்துக்கொண்டு கெத்து காட்டிக்கொண்டிருந்த முரளி (எ) பாம் முரளியை (24) கைது செய்தனர். பிரபல ரவுடியான இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்தது. பிடிபட்ட பாம் முரளி ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அதனை விற்பனை செய்து வந்துள்ளார். அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, ஒரு கத்தி போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கொடுங்கையூர், புதுவண்ணையில் கஞ்சா விற்ற திருநங்கை உள்பட 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Kodungayur ,New Eve ,Perampur ,New House ,New Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு