தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை கோயிலில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பூசாரி, உதவியாளரை கொருக்குப்பேட்டை போலீசார் கைது செய்தனர். கொருக்குப்பேட்டை ஆர்.கே. நகர் மெயின் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (39). இவர் மணலி புதுநகரில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திரிஷா. இவர்களது மகன் கவின் (13), மகள் ஹரிப்பிரியா (9). இதில், கவின் வண்ணாரப்பேட்டை ஜிஏ சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி தனது பாட்டியுடன் கொருக்குப்பேட்டை புத்தா தெருவில் உள்ள கருப்பசாமி கோயிலுக்கு கவின் சென்றான். அங்கு மின்விளக்குகள் போடப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு சென்ற மின்சார வயர் மீது தெரியாமல் சிறுவன் கையை வைத்ததும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே கவின் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் ஹவுசிங் போர்டைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சுந்தரமூர்த்தி (41) என்பவரை கைது செய்து கடந்த 8ம் தேதி சிறையில் அடைத்தார். இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த கோயில் பூசாரி மற்றும் உதவியாளரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் பதுங்கி இருந்த பூசாரி பாலகிருஷ்ணன் (34), உதவியாளர் பார்த்திபன் (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். சிறுவன் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்ததற்கு இவர்கள் 3 பேரும்தான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post கோயிலில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி; தலைமறைவாக இருந்த பூசாரி, உதவியாளர் கைது: புழல் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.
