×

புறையூரில் மக்கள் தொடர்பு முகாம் ரூ.29 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்

நாசரேத், ஜூன் 15: புறையூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். நாசரேத் அருகே உள்ள புறையூர் பஞ்சாயத்தில், மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்து 111 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 51 ஆயிரத்து 432 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசுகையில், உங்கள் கிராமத்திற்கு வந்து உங்கள் வீடுகளுக்கு அருகிலேயே அரசின் திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கும் திட்டம்தான் மக்கள் தொடர்பு முகாம். ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்படுகிறது. புறையூரில் கடந்த மாதம் 120க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 111 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

இதில் வருவாய்த் துறை மூலம் ரூ.64 ஆயிரம் மதிப்பில் 20 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ரூ.27 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் 30 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 20 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றம் மற்றும் பட்டா பெயர் மாற்றம், 21 பயனாளிகளுக்கு நத்தம் சிட்டா நகல், 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.17,712 மதிப்பில் இலவச தையல் இயந்திரம் மற்றும் இலவச தேய்ப்பு பெட்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.10,958 மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், மகளிர் திட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.90 ஆயிரம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கலைஞர் திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.5762 மதிப்பில் வேளாண் கருவிகள், இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

புறையூரில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மற்றொரு அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு இடத்தை கண்டறிந்து அடுத்த ஆண்டிற்குள் கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். புறையூர் கிராம மக்கள் அரசு அலுவலர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். அதனால்தான் அரசு அலுவலர்கள் ஆர்வமுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புறையூர் கிராமத்தை மேம்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்கும், என்றார். முகாமில் திருச்செந்தூர் ஆர்டிஓ புகாரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டிபாய், வேளாண் இணை இயக்குநர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாணயம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பொற்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், ஏரல் தாசில்தார் கைலாசகுமாரசாமி, தனி தாசில்தார் (ச.பா.தி) பேச்சிமுத்து, புறையூர் பஞ். தலைவர் செல்வக்குமார் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post புறையூரில் மக்கள் தொடர்பு முகாம் ரூ.29 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Senthilraj ,Purayur ,Nazareth ,Puraiyur ,Dinakaran ,
× RELATED ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில்...