×

கர்நாடக அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மேலிடபொறுப்பாளர்: ஆளுநரிடம் பாஜ புகார்

பெங்களூரு: கர்நாடக அரசு அதிகாரிகள் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரனதீப் சுர்ஜேவாலா பங்கேற்ற சம்பவம் கர்நாடகாவில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தனியார் ஓட்டல் ஒன்றில் பெங்களூரு மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத், பெங்களூரு வளர்ச்சி குழு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் நடந்தது. இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரனதீப் சுர்ஜேவாலாவும் இடம்பெற்றிருந்தார். இந்த புகைப்படம் டிவிட்டரில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரசு அதிகாரிகள் கூட்டத்தில் எந்தவித பதவியும் வகிக்காத காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பங்கேற்றிருக்கிறார் என்றால் கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை டெல்லியில் இருந்து காந்தி குடும்பம் தான் இயக்கிவருகிறது என்று பாஜ குற்றம்சாட்டியது. முன்னாள் முதல்வர் குமாரசாமி, கர்நாடகாவில் சித்தராமையா ஆட்சி நடக்கிறதா அல்லது 10, ஜன்பத் சாலை, புதுடெல்லி ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜ சார்பில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பதிலளித்துள்ள முதல்வர் சித்தராமையா, ‘பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்து மாநகர எம்எல்ஏக்கள் பங்கேற்ற கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா பங்கேற்றுள்ளார். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அவர் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை மேற்கொள்ளவில்லை. அந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது’ என்றார்.

The post கர்நாடக அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மேலிடபொறுப்பாளர்: ஆளுநரிடம் பாஜ புகார் appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka government ,BJP ,Bengaluru ,Randeep Surjewala ,Karnataka ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி