×

1ம் வகுப்பில் 21 மாணவர்கள் சேர்க்கை மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கலசபாக்கம் அருகே அரசு பள்ளியில்

கலசபாக்கம், ஜூன் 15: கலசபாக்கம் அருகே அரசு பள்ளியில் 1ம் வகுப்பில் 21 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். முன்னதாக மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் மாலை அணிவித்து மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வகுப்பறையில் அமர வைத்தனர். கோடை விடுமுறைக்கு பிறகு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துண்டு பிரசுரங்கள் வழங்குதல், விழிப்புணர்வு ஊர்வலம், அரசு சார்பில் வழங்கப்படும் இலவச திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கலசபாக்கம் ஒன்றியம் பத்தியவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று 1ம் வகுப்பில் 21 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களை கவுரவிக்கும் விதத்தில் மேளதாளம் முழங்க மாணவர்களுக்கு மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு வகுப்பறையில் அமர வைத்தனர். நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவலர்கள் ஜோதி ரவி ஆகியோர் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேலாளர் சிவா, ஊராட்சித் தலைவர் காயத்ரி, மேலாண்மை குழு தலைவர் சந்திரா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி வரவேற்றார். மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம், நோட்டு, எண்ணும் எழுத்தும் குறிப்பேடு வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் சார்பில் பலகை, சாப்பாடு தட்டு, தண்ணீர் பாட்டில், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம், புதுப்பாளையம், போளூர், ஜமுனாமரத்தூர் ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்கப் பரிசுகள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என எம்எல்ஏ பெ.சு.தி சரவணன் பரிசு திட்டத்தை அறிவித்துள்ளார். பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் பெற தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அரசு பள்ளியில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்க ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியில் பில்லூர் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், ஊராட்சி துணை தலைவர் பச்சையம்மாள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

The post 1ம் வகுப்பில் 21 மாணவர்கள் சேர்க்கை மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கலசபாக்கம் அருகே அரசு பள்ளியில் appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,Purana Kumba ,
× RELATED விஏஓ அலுவலகம் முன் தீக்குளித்த...