×

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு 50 உணவு மாதிரிகள் சேலம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு ஆரணியில் கோடை காலத்தை முன்னிட்டு

ஆரணி, ஜூன்15: ஆரணியில் கோடை காலம் மற்றும் மாம்பழ சீசன் முன்னிட்டு கூல்ட்ரிங்ஸ் கடை, பழக்கடை, காய்கறி கடைகளில் தரமான முறையில் குளிர்பானங்கள், பழச்சாறு,காய்கறிபொருட்கள்,பழங்கள்,தண்ணீர்விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிஷ்ணன் உத்தரவின்பேரில், ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சேகர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவபாலன், சுப்பிரமணி, எழில் சிக்காயராஜா, இளங்கோவன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் ஆரணியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஆரணி டவுன், புதிய, பழைய பஸ்நிலையங்கள், காந்திசாலை, பெரியக்கடை வீதி, சத்தியமூர்த்தி சாலை, அருணகிரிசத்திரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூல்ட்ரிங்ஸ் கடைகள், பழக்கடைகள், பழச்சாறு, ஐஸ்கிரீம் கடைகளில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மாம்பழ கடைகளில் மாம்பழங்கள் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறதா? காய்கறி மற்றும் பழக்கடைகளில் பூச்சிமருந்து பயன்படுகிறதா? என சோதனை செய்து, உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

மேலும், ஆரணி டவுன் பகுதிகளில் ஏஜென்சிகள் மூலம் கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் துறை மூலம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ மற்றும் ஐஎஸ்ஐ அனுமதி பெறப்பட்டுள்ளதா? காலவதியானதா? பாதுகாப்பில்லாமல் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து சோதனை செய்தனர். தொடர்ந்து, குளிர்பானங்கள், தண்ணீர் மாதிரிகள் சேகரித்தனர். மேலும், ஆரணி டவுன் பகுதிகளில் உள்ள காய்கறி, பழக்கடை, கூல்ட்ரிங்ஸ் கடைகளில் ஆகிய கடைகளில் காய்கறி பொருட்கள், குளிர்பானங்கள், திராட்சை, மாம்பழம் உள்ளிட்ட பொருட்கள் என மொத்தம் 50 உணவு மாதிரிகள் சேகரித்து சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘கோடை காலத்தில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள குளிர்பான கடைகளில் கூல்ட்ரிங்ஸ், பழச்சாறுகள் அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். அதனால், பழச்சாறு தயாரித்து விற்பனை செய்பவர்கள், தரமான பழங்களை பயன்படுத்தி, அதற்கு தேவையான தண்ணீர், பால் போன்றவை தரமானதாக வழங்க வேண்டும். அதேபோல், கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களில் உரிய நிறுவன லேபிள் விவரங்கள், தயாரிப்பு, காலாவதி தேதி அறிந்தே வாங்கி பயன்படுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கினர். மேலும், தரமற்ற உணவு பொருட்கள், குளிர்பானங்கள், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

The post உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு 50 உணவு மாதிரிகள் சேலம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு ஆரணியில் கோடை காலத்தை முன்னிட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,Arani ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...